உலகப்புகழ் பெற்றது செட்டிநாட்டு கலாச்சாரம் மற்றும் செட்டிநாட்டு சமையல். அந்த செட்டிநாட்டின் தலைநகராய் விளங்குவது காரைக்குடி பெருநகரம். காரைக்குடியானது நகராட்சியாய் மாற்றப்பட்டு 90 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதனை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்துவருகிறது.
ஆனால், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வசம் இருந்து வருவதால் இக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, கடந்த மாதம் காரைக்குடியில் பட்டா இல்லாத 60% வீடுகளுக்கு பட்டா வழங்கவேண்டும் எனவும், முதலமைச்சர் கொடுத்த பட்டா செல்லாமல் போனது ஏன் என்றும் தமிழக மக்கள் மன்றம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு தொடர்ச்சியாக கூட்டங்களும் போராட்டங்களும் நடத்தினர்.
இதற்கிடையே, கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரைக்குடியில் 900 அடுக்குமாடி வீடுகள் கட்ட சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.
ஏற்கனவே, முதல்வர் கையால் தரப்பட்ட பட்டாக்கள் செல்லாமல் போனது எப்படி என்பது குறித்து விசாரிக்க ஆரம்பித்தோம். தமிழக மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.இராசகுமாரிடம் கேட்டபோது, “காரைக்குடியில் மூன்றுவிதமான பட்டா பிரச்சனைகள் நிலவுகிறது. 2006ல் திமுக ஆட்சியமைத்த பிறகு துணை முதல்வராகப் பதவி வகித்த மு.க.ஸ்டாலின் அவர்களும், அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்களும் காரைக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு வழங்கிய பட்டாக்கள், இங்கிருந்த தவறான அதிகாரிகளின் ஊழலால் திமுக ஆட்சியின் அந்தக் காலகட்டத்திலேயே செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதால் அது அப்படியே நிலுவையில் இருக்கிறது. மேலும் காரைக்குடியின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் இழுப்பக்குடி கோயிலுக்குச் சொந்தமானதாக சொல்லப்பட்டு, அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு கோயில் நிர்வாகம் வரி வசூல் செய்துவந்தது.
தற்போது அவையனைத்தும் கோயில் நிலங்கள் இல்லை என்றும் அரசு புறம்போக்கு நிலங்களே என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. மூன்றாவதாக நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கண்மாய்களில் கட்டப்பட்டுள் வீடுகளுக்கு நகராட்சி அதிகாரிகள் லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டு வரி ரசீதும், மின் இணைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் இவ்வாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்குவதற்காக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கியில் கடன் பெற்று, காரைக்குடி ஆவின் பண்ணை அருகில் 11ஏக்கரில் 900 அடுக்கு மாடி வீடுகளைக் கட்டுவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த வீடுகள் வெறும் 400 சதுரடி அளவில் மிகச் சிறியதாகவும், நான்கு மாடிக் கட்டிடத்திற்கு மின்தூக்கி இல்லாமலும், இடிக்கவிருக்கின்ற
வீடுகளுக்கு மிகக் குறைவான இழப்பீடு வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இப்படி மூன்று விதமான பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு காண ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான ஒரு குழுவினை நியமித்து அனைவருக்கும் பட்டா கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தபோது கைது செய்யப்பட்டோம். சமீபத்தில் போராட்டமும் நடத்தினோம். காரைக்குடி மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றோம்” என்றார்.
தமிழ்க மக்கள் ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பரிடம் பேசியபோது, “காரைக்குடியில் ஜீவா நகர், மீனாட்சிபுரம், அண்ணா நகர், மாதவன் நகர், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்கள் குடியிருந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்த இடங்கள் கோவிலூர் கோயில் இடம் என்றுசொல்லி கோயிலுக்கு வரி செலுத்தி வந்தார்கள். அதன்பின்னர் 1973ல் சமூக நல ஆர்வலர்கள் சிலர் தேவகோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் 16/3/1973 அன்று, இந்தப் பகுதி முழுவதும் நத்தம் புறம்போக்கு என்று முடிவு செய்யப்பட்டு, அதன்பிறகு நகராட்சி எல்லைக்குள் இருப்பதால் காரைக்குடி நகராட்சி வரி வசூல் செய்துவருகிறார்கள். மேலும் அந்த உத்தரவில் ஏற்கனவே குடியிருந்துவரும் வீடுகளுக்கு ஹெட்மேன், கர்ணம் மூலமாகத் தரப்பட்ட சர்வே எண்ணை பதிவு செய்யச்சொல்லியும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த சித்திக்கின் ஆய்வறிக்கைக்கேற்ப அப்போதைய முதலமைச்சர் அவர்களால் இரண்டு செண்ட் நிலம் இனாமாகவும், இரண்டு செண்டுக்கு மேல் வைத்திருப்பவர்கள் செண்டுக்கு
ரூ.15,000 கட்டி பட்டாக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என (அரசாணை எண் 864, 30/01/2006) உத்தரவிட்டார்.
பொதுமக்களும் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் பெற்றும் தங்களின் இடங்களுக்கு அம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என பட்டாவிற்காக தாலுகா அலுவலகத்தில் செலுத்தினார்கள். அப்போது ஆட்சிக்கு வந்த திமுகவின் துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் காரைக்குடியில் இப்பகுதி நிலங்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால், அப்போது பொறுப்பில் இருந்த தாசில்தார் ஒருவர் அந்த பட்டாக்களை வழங்குவதில் ஊழல் செய்துவிட்டார் என்பதற்காக அதிகாரிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் ஒட்டுமொத்த பட்டாக்களையும் ரத்து செய்துவிட்டார்கள். இப்போது மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராக வந்திருப்பதால் மக்கள் மன்றம் மூலம் அவரது கவனத்திற்குக் கொண்டு சென்று இப்பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க ஆவண செய்துகொண்டு இருக்கிறோம்” என்றார்.
கோயில் நிலங்கள் குறித்து ஜெயராமன் என்பவரிடம் கேட்டபோது, “அழகப்பாபுரம், வள்ளலார் நகர், இரயில்வே பகுதிகள், மருதுபாண்டியர் நகர், காலவாய்ப்பொட்டல், இந்திரா நகர், இடையர் தெரு, முத்துராமலிங்க நகர் பகுதிகள் அனைத்தும் கோயில் நிலங்களா? அரசு நிலங்களா? என்பதனை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இப்பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காரைக்குடி மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும்” என்றார்.
சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் தங்களது வீடு மற்றும் இடங்கள் குறித்து வீண் சந்தேகமும், குழப்பமும் தொடர்ந்து நிலவி வருவதால் காரைக்குடி மக்கள் ஒரு வித பீதியுடனே வாழ்ந்து வரும் நிலையில் உள்ளனர்.
– பாரூக், சிவகங்கை.