மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் – சபரி தம்பதியின் 17 வயது மகள் கடந்த பிப்ரவரி 14ல் காணமல் போய், அதன் பிறகு மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி மார்ச் 6ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்குக் காரணமான அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என இதுவரை 8 நபர்கள் ஆள் கடத்தல், கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட சிறப்புச் சடங்குகளின் கீழ் மேலூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மேலூர் சிறுமியின் குடும்பத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சார்பில் தி.மு.க. நிர்வாகிகள் நேரில் ஆறுதல் கூறி ரூ.5 லட்சத்தை வழங்கினர். அதை சிறுமியின் தாய், தாத்தா உள்ளிட்ட குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
மேலும், சிறுமியின் தாய் சபரிக்கு அரசு வேலை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலவளவு அரசு துவக்கபள்ளியில் அவரை சமையலராக நியமித்து அதற்கான பணி ஆணையை வட்டாட்சியர் இளமுருகன் நேரில் சென்று வழங்கினார்.
இதையடுத்து நேற்று (9/03/2022) மாலை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பொன்னுத்தாய், பாலா, வட்டார செயலாளர் கண்ணன், வட்டக்குழு நிர்வாகிகள் அடக்குவீரன், ராசேசுவரன், முத்துலெட்சுமி ஆகியோர் உடனிருந்தனர். திமுக ஊராட்சி செயலாளர் தங்கையா, கிளைச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
– மதுரை வெண்புலி.