சென்னையில் பள்ளி வாகனம் மோதி, சிறுவன் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் எதுவுமே நடக்காதது போல், கோவையில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், விதிகளை மீறி செயல்படுவதை காண முடிகிறது.
இந்த வாகனங்களின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்துள்ளார்.கோவையில் 1,400 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், 83 மாநகராட்சி, 268 மெட்ரிக், 90 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். வாகன வசதியுள்ள பள்ளிகளில், மாணவர்கள் சென்று வர பள்ளி நிர்வாகமே வாகன வசதி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வசதி இல்லாத பள்ளிகளுக்கு, குழந்தைகளை ஏற்றிச் செல்லும் சில ஆட்டோக்கள், ஆம்னி வேன்கள் விதிமுறைகளை காற்றில் பறக்க விடுகின்றனர். அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியரை ஏற்றிச்செல்கின்றனர்.
இது குறித்து, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார் கூறியதாவது: “பள்ளிகளில் சாலை பாதுகாப்பு கிளப் ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, என்.சி.சி., ஸ்கவுட், என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் வாயிலாக அனைத்து மாணவர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியிருக்கிறோம்.
பள்ளி வளாகங்களின் முன், அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளலாம். ஆனால் அது மாணவர்களுக்கு காலதாமதத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்தும். அதனால் மோட்டார் வாகன ஆய்வாளர்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து, ஆதாரங்களை வைத்து வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியிருக்கிறேன். விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு, சத்யகுமார் கூறினார்.
டிரைவர் சீட்டில் குழந்தைகளைஏற்ற கூடாது: ஆர்.டி.ஓ., ஆர்டர்n ஆம்னி வேனில் சிறு குழந்தைகளாக இருந்தால் எட்டு பேர் செல்லவும், ஆட்டோக்களில் ஐந்து பேர் செல்லவும் அனுமதித்திருக்கிறோம். ஆட்டோ டிரைவர் சீட்டில் மாணவர்களை அமர்த்தி, இயக்குவோரின் டிரைவிங் லைசென்ஸ் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படும்.
ஆட்டோ கொக்கிகளில் புத்தக பைகளை தொங்கவிட்டு செல்லக்கூடாது. ஆட்டோக்களின் பின்பகுதியில்தான் பைகளை வைக்க வேண்டும். ஆம்னிவேன்களில் மேற்பகுதியில் வைக்க வேண்டும்.இவ்வாறு, ஆர்.டி.ஓ., சத்யகுமார் தெரிவித்தார்.குழந்தைகளின் பாதுகாப்புக்குஅதிகாரிகள் செய்வதென்ன?பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, கலெக்டர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இணைந்து, ஆண்டு துவக்கத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து சான்றளிக்கின்றனர்.
இப்படி பள்ளி துவங்கும் போது மேற்கொள்ளப்படும் ஆய்வோடு சரி. அதன் பிறகு போக்குவரத்து அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வதன் வாயிலாகவும், பள்ளி நிர்வாகம் ஆசிரியர், மாணவர்கள், டிரைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் வாயிலாகவும் விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்கலாம்.
பெற்றோர் செண்பகம் கூறுகையில், ”பல பொருளாதார சிரமங்களை கடந்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். விபத்து என்பது தவிர்க்க முடியாது. ஆனால் அஜாக்கிரதை, அலட்சியத்தால் நடக்கும் விபத்துக்களை ஏற்க முடியாது. பெத்த பிள்ளையை வாரிக்கொடுக்கவா பள்ளிக்கு அனுப்புகிறோம். ஒரு விபத்து நடக்கும் போது பரபரப்பாக உத்தரவு, கண்காணிப்பு எல்லாம் இருக்கு. அதன் பிறகு, கண்டுகொள்ள ஆள் இல்லை.
பள்ளிகளில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைக்காக மட்டும், மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அரசால் வெளியிடப்படும் பாதுகாப்பு உத்தரவுகள் பின்பற்றப்படுகிறதா என்பதை, உறுதிசெய்வது மட்டுமே இவர்களின் பணியாக இருக்க வேண்டும்,” என்றார்.
‘குற்ற வழக்குகள் இருக்கிறதாஎன உறுதி செய்ய வேண்டும்’கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ”கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பஸ்களில் நடந்த அசம்பாவிதங்களை தொடர்ந்து, விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கிறோம். மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வாகன ஓட்டுனர்களின் விபரங்களை, பள்ளிகள் வாங்கி பராமரிக்க வேண்டும்.
குற்றவியல் நடவடிக்கைகள் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். மாணவிகள் பயணிக்கும் பஸ்களில், கட்டாயம் பெண் நடத்துனர் இருக்க வேண்டும். வாகனங்களில் பிள்ளைகள் ஏறும் போதும், இறங்கும் போதும் அனைவரும் சென்றுவிட்டனரா முன், பின் யாரேனும் உள்ளார்களா என்பதை நடத்துனரை கொண்டு உறுதிசெய்த பின்பே இயக்க வேண்டும். இதுகுறித்து, ஓட்டுனர்களுக்கும், பள்ளி நிர்வாகங்கள், தலைமையாசிரியர்களுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளோம். அதிகாரிகளும் ஆய்வுகளின் போது இதனை கண்காணிப்பது வழக்கம்,” என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.