கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ரவிச்சந்திரா என்ற பக்தர், புதிதாக ஒரு புல்லட் வாகனம் வாங்கியுள்ளார்.
யுகாதி பண்டிகை அன்று வாங்கப்பட்ட தனது புல்லட் வண்டிக்கு ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குண்டகல்லுவில் பிரசித்தி பெற்ற கசாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோயிலில் பூஜை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து தனது புல்லட் வாகனத்தில், கர்நாடகாவில் இருந்து கிளம்பி, வழியில் எங்கும் நிறுத்தாமல் பயணித்துள்ளார். வண்டி சரியாக கசாபுரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சேர்ந்தபோது வண்டியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
கோவிலை வந்தடைந்த போது வண்டியில் வித்தியாசமாக ஒலி வந்ததைக் கேட்டவுடன் ஓரம்கட்டிய நேரத்தில் திடீரென, புல்லட் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் தீப்பற்றி வெடித்துச் சிதறியிருக்கிறது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பயத்தில் சற்று ஒதுங்கிச் சென்றிருக்கிறார். இதனிடையே, கூட்டத்தில் இருந்த சிலர், புல்லட்டில் பற்றிய தீயை அணைக்க தண்ணீரை ஊற்றியிருக்கிறார். இந்த விபத்தின் போது நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர், தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், புல்லட் வாகனம் தீப்பிடித்து எரிந்ததன் காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். மேலும், இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க வெகுதூரம் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் ஆங்காங்கே வழியில் நிறுத்தி, சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பயணத்தைத் தொடரலாம் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
– ராயல் ஹமீது.