கொட்டாம்பட்டியில் இலவச விவசாய மின் இணைப்புக்கு ₹.5,500/ லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராப் பணியாற்றி வருபவர், தங்கமுனியாண்டி (வயது 39).
இவர் மதுரையை சேர்ந்தவர்.
கொட்டாம்பட்டியை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன், தனது மனைவி முருகேசுவரியின் பெயரில் இலவச விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். இதுசம்பந்தமாக ஆய்வு செய்து சான்று வழங்க, இளநிலை மின்பொறியாளர் தங்கமுனியாண்டி ₹.5,500 லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத கோபாலகிருஷ்ணன், இதுகுறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகாரளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தங்க முனியாண்டியிடம் தருமாறு கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கொட்டாம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த கோபாலகிருஷ்ணன், அந்த பணத்தை தங்கமுனியாண்டியிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் துணைக் கண்காணிப்பாளர் சத்யசீலன் தலைமையிலான காவல்துறையினர் தங்கமுனியாண்டியை
கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய பின்பு அவரை கைது செய்தனர்.
விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புப் பெற விவசாயிகள் படும் சிரமங்களும், அரசு ஊழியர்களின் அட்டூழியங்களும் இப்பகுதியில் சற்று அதிகமாகவே உள்ளது.
– மதுரை வெண்புலி.