அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14-ம் தேதி, சத்தியமூர்த்தி பவனில் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
மறைந்த காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமாருக்கும் அன்றுதான் பிறந்தநாள் என்பதால் கடந்த இரண்டு வருடங்களாக அம்பேத்கர் விழாவோடு வசந்தகுமாரின் படத்துக்கும் பூ தூவி மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் கட்சியின் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், கட்சியின் சீனியரான ரூபி.மனோகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலாட்டா வரை சென்றதாகச் சொல்கிறார்கள் நிர்வாகிகள்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அண்ணல் அம்பேத்கர் படத்துடன், வசந்தகுமார் படமும் விழா நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்ததை செல்வப்பெருந்தகை விரும்பவில்லை.
`
அம்பேத்கரும், வசந்தகுமாரும் ஒன்றா? எப்படி வசந்தகுமார் படத்தை இங்கே வைக்கலாம். இதனால்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து பட்டியலினத்தவர்கள் வெளியே சென்று கொண்டிருக்கிறார்கள். பட்டியலின சமூக மக்களுக்குக் கட்சியில் உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை. வசந்தகுமார் படத்தை எடுங்கள்’ என்று கொந்தளித்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக, அண்ணல் அம்பேத்கருடன் வசந்தகுமாருக்கும் சேர்த்தே சத்யமூர்த்திபவனில் மரியாதை செய்யப்பட்டு வரும் நிலையில், திடீரென சமூக ரீதியிலான பிளவு வார்த்தைகளை செல்வப்பெருந்தகை அள்ளி வீசியதை நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
சமாதானம் செய்த சீனியர்கள்,அதனால் டென்ஷன் ஆன ரூபி.மனோகரன், `இத்தனை வருசமா யாரும் இதுமாதிரி பேசியதில்லை. பாகுபாடும் பார்த்தது இல்லை. இந்த காங்கிரஸ் கட்சிக்கு நாடார் சமூகத்திலிருந்து எத்தனையோ தலைவர்கள் தங்களுடைய சொத்துகளை எல்லாம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அம்பேத்கர் படத்துடன் வசந்தகுமார் படம் இடம்பெறக்கூடாது என்று நீங்கள் நினைத்திருந்தால்… அதை முன்கூட்டியே கட்சித் தலைமையிடம் சொல்லியிருக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் வந்து படத்தை எடுக்கச் சொன்னால் அதைச் செய்யமுடியாது’ என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.
படத்தை எடுக்கவில்லை என்றால் நான் விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று சொல்லி செல்வப்பெருந்தகை அங்கிருந்து கிளம்ப முற்பட்டார். நீங்கள் இல்லையென்றால் இந்த விழாவை எப்படி நடத்துவது என்று எங்களுக்குத் தெரியாதா என்று மனோ செல்வராஜ் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருநாவுக்கரசர் உள்ளிட்ட சீனியர்கள் தலையிட்டு சமாதானம் செய்தபின்னர்தான் சூழ்நிலை சாந்தமானது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த யாரையும் காங்கிரஸ் கட்சி புறம் தள்ளவில்லை. சமீபத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் கூட இளைஞர் காங்கிரஸ் தலைவராக லெனின் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒவ்வொரு சமூகத்துக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியாகத்தான் காங்கிரஸ் செயல்படுகிறது. இந்த சுழலில், செல்வப்பெருந்தகை ஏன் கோவப்பட்டார் என்பது புரியவில்லை” என்றனர் அந்த சீனியர் நிர்வாகிகள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், I. அனஸ்.