சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், புழுதிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 42). கூலித் தொழிலாளி. இவருக்கு காந்திமதி எனும் மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக நீண்ட நாட்களாக அடிக்கடி பிரச்சினைகள் இருந்திருக்கிறது.
இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்பு காந்திமதி மகளை அழைத்துக்கொண்டு தனது தந்தையின் ஊரான மணப்பாறை அருகே உள்ள செட்டிபட்டி கிராமத்திற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக வீரபாண்டி தனது வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
தகவலறிந்து வந்த புழுதிபட்டி காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து காந்திமதி அளித்த புகாரின் பேரில் புழுதிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.