திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்தாண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த வீரா (எ) வீராசாமி, இரு அரசுப் பள்ளிகளுக்கும் சென்று, தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்தாலோசனை செய்தார். அப்போது, அப்பள்ளி தொடர்ந்து மாவட்ட அளவில் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளில் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வருவதை அறிந்து பாராட்டுத் தெரிவித்தார்.
அதேநேரத்தில், பள்ளி மாணவர்கள் பலர் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல், பல்வேறு கோணங்களில் வெட்டி கொண்டு பள்ளிக்கு வந்திருந்ததைப் பார்த்த அவர், அதுபற்றி ஆசிரியர்களிடம் கேட்டார். பெற்றோர்களிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்களது ஒத்துழைப்பு இல்லாததால் மாணவர்கள் இதுபோல் வருவதாக ஆசிரியர்கள் இதுகுறித்து வேதனையுடன் கூறினர். இதைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை அழைத்துப் பேசிய ஊராட்சி தலைவர் வீரா, பள்ளியில் படிக்கும் போதே ஒழுக்கத்துடன் வளர்த்தால்தான் அவர்கள் அரசு அதிகாரிகளாகவோ, பொது வாழ்க்கையிலோ வெற்றி பெற்று சாதனை புரிய முடியும். அதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என அறிவுறுத்தினார். மேலும், மாணவர்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டி கொண்டு வர, உங்களது ஒத்துழைப்பு அவசியம் என ஆதரவை கேட்டார்.
பின்னர், பெற்றோர்களின் சம்மதத்துடன், பள்ளி வளாகத்துக்கே 10க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, பல்வேறு டிசைன்களில் முடி வெட்டியிருந்த 300 மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அங்கேயே காவல்துறை கட்டிங் போல் சிகை அலங்காரம் செய்து வைத்தார். அதேபோன்று கை, கால் நகங்களும் வெட்டி சுத்தம் செய்யப்பட்டது. இதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
கீரிக்குட்டிகள் போல சுற்றிய மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்து, அவர்களது கையில் ஆளுக்கொரு குளிர்பானம் அன்பு பரிசாக கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஒழுக்கம் கல்வியின் மகுடமாக இருக்கும் வரை மட்டுமே மாணவர்களின் கல்வி பயனைத்தரும் இல்லையேல் இடும்பை தந்து, சமூகத்தில் இழிவைத் தேடித்தரும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
– பாரூக்.