ஹெச்டிஎஃப்சி குழும நிறுவனங்களை இணைக்க இயக்குனர் குழு முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக ஹெச்டிஎஃப்சி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹெச்டிஎஃப்சியுடன் இணைக்கப்படும். இதனை தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் ஹெச்டிஎஃப்சி இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி-யின் இந்த அறிவிப்புக்கு மத்தியிலேயே நேற்று இந்த வங்கி பங்கின் விலையானது கணிசமான அதிகரித்திருந்தது.
எனினும் இன்று ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கின் விலையானது 2% குறைந்து, 1624.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே ஹெச்டிஎஃப்சி பங்கின் விலையானது 1.13% குறைந்து, 2649.30 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இந்த இணைப்பினால் சில சாதகமான விஷயங்கள் இருக்கிறது என்றாலும், வாடிக்கையாளர்கள் எந்த மாதிரியான தாக்கத்தினை உணர்வார்கள்? என்பதை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இது இணைப்பு நடவடிக்கையானது 2024ம் நிதியாண்டின் 2வது மற்றும் மூன்றாவது காலாண்டில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் நிர்வாக அமைப்பு, வணிக ஒருங்கிணைப்பு, இதனால் என்னென்ன நன்மைகள்? என பலவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது.
எனினும் வங்கிகளின் செயல்பாடுகள், அதன் செயல்பாட்டு விவரங்கள், வாடிக்கையாளர்கள் ஹெச்டிஎஃப்சி -யில் இருந்து ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு எப்படி மாற்றுவது? இனி எப்படி செயல்படும் என்பது குறித்தான முறையான அறிவிப்பு ஏதும் வரவில்லை. ஆக இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பற்பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகளின் இணைப்பானது 12 – 18 மாதங்களில் இருக்கலாம் . அதுவரை இவை தனித் தனி நிறுவனங்களாகவே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழுமையாக தற்போது தெரியாவிட்டாலும், ஹெச்டிஎஃப்சி-யின் திறன் காரணமாக ஹெச்டிஎஃப்சி வங்கி ஆதாயமடையலாம். ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிதிச் செலவானது குறைவாக இருப்பதால், அதன் பலனை வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க முடியும். எனினும் இதனை தற்போதைக்கு கணிப்பது மிக கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எப்படியிருனும் இது கடன் வாங்குபவர்களுக்கு பலனை தரலாம். ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மூத்த நிர்வாக அதிகாரிகள் ஏற்கனவே கூறிய படி, கிராஸ் செல்லிங் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு தங்களது கிரெடிட் கார்டு கடன், தனி நபர் கடன் என அனைத்தையும் ஒப்பிட்டு பார்ப்பதற்கான தேர்வுகள் இருக்கலாம். வாடிக்கையாளர்கள் அடமான கடன் நிறுவனத்தில் இருந்து வீட்டு கடனுக்கு விண்ணபிக்கலாம்.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை விட வங்கிகளுக்கு விதிமுறைகள் அதிகம். ஆக வங்கிகள் கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இது புதியதாக கடன் வாங்குபவர்களுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் தொடங்குகிறது. இதற்கிடையில் இந்த இணைப்பு பிறகு வங்கிக்கும் ஹெச்டிஎஃப்சி -க்கும் போட்டித் தன்மை இருக்கலாம் என பேங்க் பஜார் -ன் தலைமை செயல் அதிகாரி ஆதில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
டெபாசிட் தொகை என்பது அடிப்படையில் வாடிக்கையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமாகும். ஆக ஆரம்பத்தில் நிறுவனம் என்ன வட்டி விகிதம், என்ன நிபந்தனைகளை விதித்திருக்கிறதோ? அதுவே முதிர்வு காலம் வரையில் இருக்கலாம். ஆக இந்த இணைப்பினால் மாற்றம் எதுவும் இருக்காது. எனினும் இந்த இணைப்புக்கு பிறகு உங்களது டெபாசிட் புதுப்பிக்கப்படுகின்றது என்றால், அப்போது வட்டியில் மாற்றம் இருக்கலாம்.
ஹெச்டிஎஃப்சி லிமிட்டெட்டின் வாடிக்கையாளர்கள் இணைப்புக்கு பிறகு, ஹெச்டிஎஃப்சி வங்கியில் இருந்து அனைத்து திட்டங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. எனினும் தரவுகளின் படி, ஹெச்டிஎஃப்சி-யின் 70% வாடிக்கையாளர்கள், ஹெச்டிஎஃப்சி வங்கியில் இல்லை என உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அதேபோல ஹெச்டிஎஃப்சி வங்கியின் 80% வாடிக்கையாளர்கள் அடமான கடன் பெறவில்லை. ஆக இதில் கிராஸ் செல்லிங் என்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஹெச்டிஎஃப்சி லிமிடெட் கிளைகள் தக்கவைக்கப்படும். ஆனால் எதிர்காலத்தில் முழு சேவை வங்கிக் கிளைகளாக மாற்றப்படலாம்.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.