காவல் துறை நெடுஞ்சாலைத் துறை வருவாய்த்துறை இணைந்து கமிட்டி அமைத்து மேம்பால வேலையை விரைந்து முடிக்க நடவடிக்கை!
கோவை – அவிநாசி ரோட்டில் கட்டப்படும் மேம்பாலத்தில் இறங்கு தளம் அமைக்க தாமதம் ஏற்படுகிறது. இப்பணியின் போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க, போலீசாரை இணைத்து கமிட்டி அமைக்க நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை – அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. சிட்ரா பகுதியில் ஓடுதளம் அமைக்கப்படுகிறது. இப்பணிகளை, நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குனர் கோதண்டராமன் கள ஆய்வு செய்தார்.
சின்னியம் பாளையத்தில், ‘பாக்ஸ் கர்டர்’ கட்டுமானத்தை பாார்வையிட்ட அவர், கான்கிரீட் கட்டுமானத்தை உடைத்து, அதன் தரத்தை பரிசோதித்தார்; டி.எம்.டி., கம்பிகளின் உறுதித்தன்மையை ஆய்வுக்கு உட்படுத்தினார். 20 துாண்களுக்கு இடையே மட்டுமே ஓடுதளம் அமைத்திருப்பதால், பணியை வேகப்படுத்த உத்தரவிட்டார்
தலா இரு இடங்களில் ஏறுதளம், இறங்கு தளங்கள் கட்ட வேண்டும். இதில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முன் மட்டும் ஏறுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதனால், இறங்கு தளம் கட்டும் பணியை உடனடியாக துவக்க, கோதண்டராமன் அறிவுறுத்தினார். ‘பீக் ஹவர்ஸில்’ போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், போலீசார் அனுமதி கொடுக்க மறுப்பதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து கமிட்டி அமைத்து, வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில், இறங்கு தளம் அமைப்பதற்கான வேலையை விரைந்து மேற்கொள்ள, இயக்குனர் அறிவுறுத்தினார்.இதைத்தொடர்ந்து, இரு இடங்களில் இறங்கு தளம் அமைப்பதற்கான பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அடுத்த மாதம் துவங்க இருக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.