சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுபாண்டியன் மகன் சிவமணிகண்டன்(வயது 31). இவருக்கும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் தூவார் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகள் பிரியங்காவுக்கும்(26) கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். சிவமணிகண்டன் – பிரியங்கா இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது தந்தை சேதுபாண்டியன் சிங்கம்புணரி வாரச்சந்தையில் வாங்கி வந்துள்ள காய்கறிகளை எடுத்து வைக்கும்படி கணவர் சிவமணிகண்டன் பிரியங்காவிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் மாடிக்கு சென்ற பிரியங்கா, அங்கு தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் விரைந்து சென்று பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியங்காவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை கண்ணன் காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். சிவமணிகண்டன் – ப்ரியங்கா இடையே திருமணம் நடந்து 6 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.