விரைவு ரயில்களில் போதிய டிக்கெட் பரிசோதகர்கள் இல்லாததால், ஆர் – ஏசி பயணியருக்கு படுக்கை ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். கோடை விடுமுறை முடிந்துள்ள நிலையில், வெளியூர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு திரும்ப துவங்கி உள்ளனர். இதனால், ரயில்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. பயணத்திற்கு தகுதியாக, அதே நேரம் இருக்கை ஒதுக்கீட்டுக்கு காத்திருப்போர், குறைந்த எண்ணிக்கையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள், ரயில்களில் ஏறி பயணம் செய்து வருகின்றனர். ஆர்.ஏ.சி., பயணியருக்கு படுக்கை வசதி ஒதுக்குவதில், கால தாமதம் ஏற்படுவதாக, பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாதவர்களும் ஏறி, நின்று பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் முன்பதிவு செய்தவர்களின் இருக்கையிலேயே, அமர்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வோர் அவதிப்படுகின்றனர். ஆர் – ஏசி டிக்கெட் வைத்திருப்போர், டிக்கெட் பரிசோதர்களுக்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. டிக்கெட் உறுதியாகாத நிலையில், காத்திருப்பு பட்டியல் இருப்பவர்களும், முன்பதிவு பெட்டிகளில் அதிகம் பயணம் செய்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
டிக்கெட் பரிசோதர்கள் சிலர் கூறுகையில், ‘போதிய அளவில் டிக்கெட் பரிசோதர்கள் இல்லாததால், ஒரு டிக்கெட் பரிசோதகர் அதிகபட்சமாக, ஐந்து பெட்டிகள் வரையில் பார்க்க வேண்டி உள்ளது. ‘இதனால், பயணியருக்கு உடனுக்குடன் சேவை வழங்குவதில், சமீபகாலமாக நடைமுறை சிக்கல் இருந்து வருகிறது’ என்றனர்.
டி.ஆர்.இ.யூ., உதவி தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர்கள் பிரிவில் மட்டும் 2,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. முன்பெல்லாம் ஒரு டிக்கெட் பரிசோதகர், இரண்டு முன்பதிவு அல்லது நான்கு ‘ஏசி’ பெட்டிகளை பார்ப்பர். ஆனால், தற்போது அவர்களின் பணிச் சுமை அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் பயணியருக்கான சேவையும் பாதிக்கப்படுகிறது. எனவே, ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-அன்சாரி, நெல்லை.