கோவை ரியல் எஸ்டேட் நிறுவன மேலாளரை தாக்கி, 82 லட்சம் ரூபாய் பறித்துச்சென்ற புரோக்கரை பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, விளாங்குறிச்சி ரோடு, ஜீவா நகர் அருகே சிகரம் கார்டன் என்ற பெயரில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அங்கு ரியல் எஸ்டேட் உரிமையாளர் சார்பில் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலாளராக இருக்கும் லியோ மரிய இருதயராஜ், 53, அலுவலகத்தை நிர்வகித்து வந்தார். கடந்த, 9ம் தேதி லே-அவுட்டில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு தருவதற்காக, 82 லட்சம் ரூபாய் எடுத்து வந்து மரிய இருதயராஜ் வைத்திருந்தார்.
இந்த விபரத்தை, அங்கு வந்து பேச்சுக்கொடுத்த புரோக்கர் சவுரிபாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் (எ) கென்னடி அறிந்து கொண்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மரிய இருதயராஜிடம் பணத்தை பறிக்க திட்டமிட்டார். யாரும் அருகில் இல்லாத நேரத்தில், திடீரென ஆக்ஸா பிளேடை கையில் எடுத்த கென்னடி, மரிய இருதயராஜ் கழுத்தில் வைத்து மிரட்டினார். அவர் திமிறியதில் காது, தோள் பட்டையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அவரை மிரட்டி டேபிள் டிராயரில் இருந்த, 82 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினார். சம்பவம் பற்றி மரிய இருதயராஜ் பீளமேடு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். சிறப்பு எஸ்.ஐ., ஜெய்சங்கர் வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் அமுதா, பணத்துடன் தப்பிய புரோக்கர் கென்னடியை தேடி வருகிறார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.