கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவுக்கு மக்கள் வரும் விதமாக அவினாசி சாலை வழியாக செல்லும் அரசு பேருந்துகள் கொடிசியா வரை சென்று திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புத்தக திருவிழா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை அண்ணா சிலை அருகே உள்ள கொடிசியா அலுவலகத்தில் கோவை புத்தக கண்காட்சியின் தலைவர் விஜயானந்த், ரோட்டரி சங்க மாவட்ட இயக்குனர் மயில்சாமி, கன்வீனர் சவுந்தரராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது :
கோவை புத்தக திருவிழா நாளை துவங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை மாலை 5.30 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைக்கிறார்.10 நாட்களும், பேச்சுப்போட்டி, சிலம்பாட்டம், எழுத்தாளர் வாசகர்கள் சந்திப்பு, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட வெவ்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.ஜூலை 27ம் தேதி ரோட்டரி சங்கங்கள் தத்தெடுத்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அழைத்து வந்து, புத்தகத்திருவிழாவை காண செய்கிறோம்.
மாணவர்கள் வரும் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும், பேச்சாளர்கள் பலரும் மாணவர்கள் மத்தியில் பேச உள்ளார்கள். மாணவர்களை அழைத்துவர வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. அவினாசி சாலை வழியாக செல்லும் டவுன் பேருந்துகள் கொடிசியா வளாகம் வரை சென்று திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நடிகர் தாமு மாணவர்களை ஊக்கப்படுத்தி உரையாற்றுகிறார்.
போட்டிகளில் பங்கேற்கும் ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.200 மதிப்புள்ள கூப்பன் வழங்குகிறோம். அதன் மூலமாக அவர்கள் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.ரோட்டரி சங்கங்கள் தத்தெடுத்துள்ள ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்க உள்ளோம். மாணவர்கள் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.
அவர்களை புத்தகம் வாசிக்க வைக்கும் நோக்கில் இதனை செய்கிறோம்.ரோட்டரி சங்கம் இரண்டாவது முறையாக கொடிசியாவுடன் இணைந்து புத்தக கண்காட்சியை நடத்துகிறது.இந்த கண்காட்சியில் 280 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 150 பதிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த கண்காட்சியில் 10 முதல் 15 சதவீதம் தள்ளுபடி விலையில் தரப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ.1.5 கோடி வரை புத்தகங்கள் விற்பனையானது. இந்தாண்டு ரூ.3 கோடி வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
– சீனி,போத்தனூர்.