தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்தாற்போல் மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி தசரா திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தசரா திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வளாகத்தில் நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர் கையால் மாலை அணிந்து விரதம் இருந்து வர தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 26.09.2022 முதல் 05.10.2022 வரை நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு இன்று (04.10.2022) முதல் 06.10.2022 ஆகிய மூன்று நாட்கள் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (04.10.2022) குலசேகரன்பட்டினம் ராயல் மஹாலில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்; மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சரவணன் இ.கா.ப ஆகியோர் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.