கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராசிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தர்ராஜ். இவரது மகன் கவின் பிரபு. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
கவின் பிரபு சிறு வயது முதலே விளையாடுவதற்கு என ஒரு பொருளை வாங்கினால் அந்தப் பொருளை உடைத்து அதிலிருந்து சிறப்பான ஒன்றை உருவாக்கும் திறமை பெற்றவராக இருந்துள்ளார். எட்டு வயதிலிருந்தே பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார் மற்றும் ஆச்சரியமான புதுமைகளைக் கொண்டு வந்தார்.
மேலும் அவரது பெற்றோர்கள் மற்றும் அறிவியல் ஆசிரியை ஷோபனாவும் கவின் பிரபுவின் கண்டுபிடிப்புக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வந்துள்ளனர். மேலும் கவின் பிரபு நண்பருடன் சேர்ந்து பல கல்லூரிகளுக்கு இடையேயான விழாக்கள் மற்றும் அறிவியல் மன்றங்களில் கலந்து கொள்வதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளனர். இவரின் இந்த திறமையைப் பயன்படுத்தி கவின் பிரபுவின் பெற்றோர்கள் துணையோடு தற்போது 1500 ரூபாய் செலவில் CNC இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
பொதுவாக CNC இயந்திரம் என்பது தொழிற்சாலைகளில் மிகப்பெரிய உருவத்திலான இருக்கும் இயந்திரங்கள் ஆகும். ஆனால் கவின் பிரபு தயாரிக்கப்பட்ட இயந்திரம் ஒரு உள்ளங்கை அளவில் உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று பொதுமுடக்கம் காலங்களில் பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு வீடுகளில் முடங்கி இருந்த பொழுது 1500 ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் உள்ளூரிலிருந்து பெறப்பட்ட பழைய உடைந்து போன பொருட்களின் ஸ்கிராப்பை பயன்படுத்தி அவர் வடிவமைத்த CNC இயந்திரம் உடனடி வெற்றி பெற்றுள்ளது.
தற்போது இந்த CNC இயந்திரத்தின் மூலம் ஒரு சிறிய வடிவிலான சாக்பீஸ் சுண்ணாம்பு துண்டை கொண்டு சிறிய அளவிலான சிலைகளை உருவாக்கி வருகிறார்.
மேலும் அப்புறப்படுத்தப்பட்ட பிரிண்டர் பாகங்களிலிருந்தும் தூக்கி எறியப்பட்ட டிவிடி ரைட்டர் பாகங்கள் மற்றும் பிவிசி பைப்புகள் பழைய பேரிங்ஸ் போல்ட் நட்டுகளை வைத்து அளவு குறைந்த மின் நுகர்வு ஆகியவை வைத்து தனிப்பயனாக்கப்பட்ட உருவப்படத்தையும் உருவாக்கியுள்ளார். CNC திட்டத்தை விரிவு படுத்துவதைத் தவிரத் தொழில் முனைவோராக அடியெடுத்து வைக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் அதை நிறைவேற்றுவதற்காக தற்போது ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுடன் முயற்சித்து வருவதாகக் கூறுகிறார் கல்லூரி மாணவரான கவின் பிரபு. மேலும் தான் தயாரிக்கப்பட்ட சிறிய வகையிலான இந்த இயந்திரங்களைச் சிறிய தொழிற்சாலைகளில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.