தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 5 யூனிட்டுகள் உள்ளன.
இதன்மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட்வரை மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில், 3, 4, 5 ஆகிய 3 யூனிட்டுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இங்கு 40 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. தற்போது காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் போதுமான அளவு கிடைக்கிறது. சென்னை மின் பகிா்மான தலைமை அலுவலகத்திலிருந்து வந்த தகவலின்பேரில் இங்கு 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 2 யூனிட்டுகளில் உற்பத்தி நடைபெறுகிறது என்றனா்.
மே மாதம் முதல் ஜூலை வரை காற்று காலம் தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.