கோவை மாவட்டம் காரமடையில் நகை கடை பூட்டை உடைத்து தங்க நகை, 6 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்ததை தொடர்ந்து காரமடை காவல்துறையினர் சிசிடிவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள வைர நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு செட்டர் திறந்து இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாந்தாமணிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனே சாந்தாமணி மற்றும் செந்தில் ஆகியோர் கடைக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த தங்க பவுன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் கடையில் ஆய்வு செய்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி. சி. டி. வி கேமிராக்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சாந்தாமணி கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகிலும், கண்காணிப்பு கேமிராக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.