கோவை : மக்கள் அமைதியாக வாழ தேவார மாடல் உருவாக சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் வேண்டுகோள்!
நாட்டில் மக்கள் அமைதியாக வாழ தேவார-திருவாசக பாடல்களைப்பாடி தேவார மாடலை கொண்டு வர வேண்டுமென சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை அருகே உள்ள வெள்ளலூர் அருள்மிகு அரசண்ணன் திருவாசக முற்றோதல் பேரவை, சக்தி பில்டர்ஸ் ஆகியன இணைந்து தேவார பாடசாலை ஏற்படுத்தியுள்ளனர். இதன் திறப்பு விழா தொழிலதிபர் வி. பி .மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. பாடசாலையினை சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில், 50க்கும் மேற்பட்ட கோவில்களை கொண்ட வெள்ளலூர், ஆன்மீக பூமியாக திகழ்கிறது. இங்கு தேவார பாடசாலை அமைவது பொருத்தமே. இறைத்தன்மைக்கு பல வழிகள் இருந்தாலும், பன்னிரு திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்களை தினமும் பாடுவதால் அனைவரும் அமைதியாக வாழ முடியும். இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதுவே தேவார மாடல். குழந்தைப் பருவம் முதலே நம் சமய நெறி முறைகளை, குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் சமுதாயத்தில் குற்றமற்றவர்களாக சிறந்து விளங்குவது உறுதி என குறிப்பிட்டார்.
விழாவில் கோவை ஜீயர் சுவாமிகள், மூர்த்தி லிங்க தம்பிரான் சுவாமிகள், வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலம், துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் பேசினர். உலக சிவனடியார்கள் திருக்கூட்ட நிர்வாகி ஆ.வெ.மாணிக்கவாசகம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக வங்கி ஓய்வு பெற்ற அலுவலர் கனகசபாபதி வரவேற்றார் .கவிஞர் முனுசாமி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.