திருப்பூரின் லட்சிய கனவு நிறைவேறும்!!
திருப்பூர்:திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம் லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை விரைவில் எட்டிப்பிடிக்கும் என, அமைச்சர் சாமிநாதன் பேசினார்.நொய்யல் கரையில், திருப்பூர் பொங்கல் திருவிழா, 15 ல் துவங்கி நடைபெற்றது.
நேற்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு கலெக்டர் வினீத் தலைமைவகித்தார். ஜீவநதி நொய்யல் சங்க தலைவர் ரத்தினசாமி வரவேற்றார்.எம்.பி., சுப்பராயன், அமைச்சர் கயல்விழி, எம்.எல்ஏ., செல்வராஜ், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஜீவநதி நொய்யல் ‘சிடி’ மற்றும் ‘நிட்மா’ தலைவர் ரத்தினசாமி எழுதிய ‘நொய்யல் பயணம்’ புத்தகம் வெளியிடப்பட்டது.நொய்யல் கரையில் சாலை அமைத்ததற்காக, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன், நிட்மா சங்க தலைவர் ரத்தினசாமி, சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன், டெக்கிக் பொருளாளர் இளங்கோ, பில்டர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி, அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:பஞ்சு விலையில் நிலையற்ற தன்மை, கொரோனா, தொடரும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.நெருக்கடியான இந்த நிலை மாறும். தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு கைகொடுக்கும். லட்சம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை திருப்பூர் பின்னலாடை துறை விரைவில் எட்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், ‘டிப்’ தலைவர் மணி உள்பட பலர் பங்கேற்றனர். பொறியாளர் சண்முகராஜ் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.