கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலமான சிற்றாறு அணைப்பகுதியானது கேரளா எல்லையை ஒட்டி உள்ளது. விடுமுறை தினங்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இயற்கையை ரசித்து செல்கின்றனர். இங்கு குடும்பத்துடன் வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
அணையின் அருகில் ரப்பர் தோட்டங்களில் கஞ்சா போதையில் இருக்கும் வாலிபர்கள் இயற்கை அழகை ரசிக்க செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அந்தப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட வெளிநாட்டு போதை பொருட்கள் விற்பனை செய்வதுடன் பல்வேறு குற்ற சம்பவங்களும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
நேற்று அப்பகுதிக்கு சென்ற பெண்களிடம் அங்கு இருந்தா போதை வாலிபர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் ஆபாசமான வார்த்தைகளால் பேசி அவர்களை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்த நிலையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்கு இருந்தா போதை கும்பலை விரட்டி அடித்துள்ளனர்.
கேரளாவில் இருந்து நெட்டா சோதனை சாவடி வழியாக குமரி மாவட்டத்திற்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை சிற்றாறு அணைப்பகுதியில் நிலவி வருகிறது. அப்பகுதியில் சாலையோரம் செயல்படும் சில கடைகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாகவும், வெளியூர்களில் இருந்து சுற்றுலா வரும் நபர்கள் இளம் பெண்களுடன் காரை லாட்ஜ் ஆக பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
போதைப் பொருளின் புகலிடமாக இருக்கும் இந்த பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.