மதுரை மாவட்டம், கருங்காலக்குடி அருகே உள்ள அய்யாபட்டி மலம்பட்டியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அதே ஊரை சேர்ந்த செல்வம் – வசந்தி தம்பதியின் மகன் விஜய் (வயது 30). சிறுமியும், விஜய்யும் உறவினர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விஜய், அந்தச் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பிறருக்குத் தெரியாமல் அழைத்துச் சென்று, சிங்கம்புணரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்து திருமணம் முடித்து, குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த சிறுமியின் தாயார் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் சாந்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இதனிடையே, விஜய் தனது சொந்த ஊரான அய்யாபட்டி மலம்பட்டிக்கு ரகசியமாக வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற கொட்டாம்பட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஹரிஹரன், பெண் தலைமை காவலர் கல்பனா ஆகியோர் தேடுதல் வேட்டை நடத்தி விஜய்யை கைது செய்தனர். விசாரணைக்கு பின்பு விஜய், மேலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
-தமிழரசன், மேலூர்.