கோவை மாநகரில் செயல்படும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஸ்டேஷன்ஸ் ஹேப்பினெஸ் ஆபீசர் என்ற பெயரில் மகிழ்ச்சி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர்களாகவும், போலீசார் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் பற்றியும் நன்கு அறிந்தவர்களாகவும், இருப்பவர்கள் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்த பாதிப்பு இருக்கும் போலீசாரை கண்டறிந்து, அவர்களுடன் பேசி தாங்களாகவோ, அதிகாரிகள் மூலமாகவோ பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான், மகிழ்ச்சி அதிகாரிகளின் பணி. சமீபத்திய டி. ஐ. ஜி. விஜயகுமார் தற்கொலைக்கு பிறகு போலீசார் மன அழுத்தத்துக்கு தீர்வு காண்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி போலீஸ் நிலையங்களில் பணியாற்ற உள்ள மகிழ்ச்சி அதிகாரிகள் கூட்டம் கோவை மாநகர் காவல் ஆணையர், அலுவலகத்தில் இன்று நடைபெற்றது, இந்த கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் 30 மகிழ்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மன அழுத்தத்தை, போக்குவது எப்படி என்பது குறித்து டாக்டர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. குடும்பச்சூழல், பணிச்சுமை, உடல் நலக்குறைபாடுகளால் ஏற்படும் மன அழுத்தத்துக்கு தீர்வு காண்பது பற்றியும் டாக்டர்கள் எடுத்து கூறினர்.
முன்னதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, மன அழுத்தம் வராமல் தவிர்க்க, போலீசாருக்கு வாராந்திர விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வீடு அமைந்துள்ள பகுதிக்கு இடமாறுதல் வேண்டும் என்று கோரியவர்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் அவ்வப்போது குடும்பத்தினர் சந்திப்பு, நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மகிழ்ச்சி அதிகாரிகள் என்ற பெயரில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணியில் இருக்கும் போலீசாரின் செயல்பாடுகளை கண்காணித்து, ஏதேனும் மன அழுத்தம் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் உடனடியாக செயல்படுவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.