ஆன்லைன் வேலை என கூறி இன்ஜினியரிடம் ரூ. 5.88 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை உப்பிலிபாளையம் காந்திபுதூரை சேர்ந்தவர் கீர்த்தி குமார்(35). பிஇ பட்டதாரியான இவர். பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அவர் டெலிகிராம் குழுவில் இணைந்து தனது விவரங்களை பதிவு செய்தார். இதில் தொடர்பு கொண்ட நபர் தாங்கள் அனுப்பும் விளம்பரத்தை பார்த்து ஷேர் செய்தால் அதிகளவில் பணம் தருவதாகவும், அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பிய கீர்த்தி குமார் அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ. 5.88 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அந்த நபர் சொன்ன படி பணம் தரவில்லை. தான் முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனையடுத்து கீர்த்தி குமார் டெலிகிராம் குழுவின் மூலம் அந்த நபரை தொடர்பு கொண்டு தான் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு அவர் ரூ. 10 லட்சம் முதலீடு செய்தால்தான் நீங்கள் செலுத்திய தொகையை லாபத்துடன் திரும்ப பெற முடியும் என தெரிவித்துள்ளார். அதன்பிறகு அந்த நபரை கீர்த்தி குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆன்லைன் வேலை என கூறி ரூ. 5.88 லட்சம் மோசடி செய்து விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.