பாஞ்சாலங்குறிச்சியில் களைகட்டிய மாட்டு பொங்கல் திருவிழா.!!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாக பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை திகழ்ந்து வருகிறது. இந்த சுற்றுலா தலத்தில் ஆண்டுதோறும் தமிழகத் திருநாளான மாட்டுப் பொங்கல் தினத்தில் காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு நேற்று காலையில் காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் வீரச்சக்க தேவி ஆலய குழு சார்பில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. காலையில் வீரச்சக்கதேவி ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாட்டுக்கு கோமாத பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அப்போது வீரச்சக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனை நடந்தது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட இசை பள்ளி சார்பில் பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி மற்றும் பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து தாங்கள் கொண்டு வந்த உணவை அருந்தி சென்றனர். சுற்றுலா பயணிகள் கோட்டையில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு முன்பு செல்பி எடுத்து சென்றனர். கோட்டையில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் சுதந்திர போராட்டத்தின் போது நிகழ்ந்த சண்டைக் காட்சி புகைப்படங்களை ஆர்வமுடன் பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளுக்கு பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டன. கோட்டையில் சுற்றுலா பயணிகள் மாலை 5 மணி வரை கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சியின் போது பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் கமலாதேவியோகராஜ், வீரச்சகாதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி, செயலாளர் செந்தில், பொருளாளர் சுப்புராஜ் சௌந்தர், துணை தலைவர்கள் முருகேசன், வேல்சாமி, பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் படி மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் –முனியசாமி.