ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் குப்பமுத்து. இவர் நேற்று இரவு பணி முடிந்து காந்திபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இவர் வி.கே.கே. மேனன் சாலையில் சென்றகொண்டிருந்த பொழுது, மர்ம நபர் ஒருவர் அந்த சாலையில் சென்ற ஒரு பெண்ணிடம் தங்க நகையை பறித்து கொண்டு தப்பினார். மர்ம நபர் பெண்ணின் நகை பறித்து தப்பியதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த வசந்குமார் என்பவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குப்பமுத்துவிடம் தெரிவித்தார்.
இதையடுத்து குப்பமுத்து, வசந்தகுமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அந்த நபரை தேடினர். அப்போது அந்த மர்ம நபர் பாரதியார் சாலையில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பிடிப்பட்டார். விசாரணையில் அந்த மர்ம நபர் உடையாம் பாளையத்தை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 22) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் ரத்தினபுரியில் நகைப்பறிப்பு முயற்சியில் ஈடுபட்டு விட்டு, வி.கே.கே.மேனன் சாலையில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை காட்டூர் காவல் நிலைய போலீசாரிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார். இதயடுத்து போலீசார் பிரதீப்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பரதீப்குமார் மீது நகைப்பறிப்பு, திருட்டு உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது, நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை துரத்தி பிடித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குப்பமுத்துவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.