கோவை மாவட்டம் பொள்ளாச்சி இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரங்களை வெட்ட யாராவது அனுமதி கோரும் பட்சத்தில் அனுமதி வழங்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
மனுவில் குறிப்பிட்டதாவது; ஆனைமலை சாலையில் தாத்தூர் பிரிவு அருகே நெடுஞ்சாலைதுறையினரால் சாலை மேம்பாட்டு பணிக்கு இடையூறாக உள்ள 27 மரங்களை வெட்ட வருவாய்த்துறையிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அந்தக் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டு முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையை வெளியிட்டு இயற்கையை பாதுகாத்து, பறவையினங்கள் தங்களின் குடும்பத்தோடு வாழ வழிவகுத்த பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு அறக்கட்டளை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதோவொரு காரணம் கொண்டு பலவருடங்களாக இருக்கும் மரங்களை வெட்ட பொதுமக்களை முன்னிறுத்தி அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. மரங்கள் நிழல் தருவது மட்டுமல்ல, அனைத்து உயிர்களும் வாழ பிராண வாயுவை தருகிறது. மேலும் பறவைகளின் பசியைப் போக்கி அவைகள் வாழும் வீடாகவும் இருக்கிறது மரங்கள்.
இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை மரங்களையும் விதைத்த பறவைகள் தற்போது ஏதோவொரு வகையில் அழிந்து வரும்நிலையில், அவைகளை காக்கும் கடமையும் பொறுப்புணர்வும் நமக்கு இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மரங்களை வெட்ட அரசு அனுமதி வழங்க வேண்டாம்.
அதேபோல், மரங்கள் இருக்கும் இடத்தில் வீடுகள் இருப்பின், வீடுகள் மீது மரங்களின் கிளைகள் விழும்படி இருந்தால், மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டுவதில் எங்களுக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை. பசுமையாக பறவைகளின் வீடாக இருக்கும் மரங்களை பாதுகாக்க அரசு முக்கியத்துவம் காட்டவேண்டும் என்பதை அறக்கட்டளை சார்பில் தாழ்மையோடு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல், அறங்காவலர் எஸ்.முருகானந்தம், திட்ட ஆலோசனை குழு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பாளர் எம்.கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.