கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கும் இப்பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது மேலும் வன விலங்குகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
அதேசமயம் வன விலங்குகளால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களிடம்
மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை P.பரமசிவம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு இப்பகுதி மக்கள் சார்பாக பணிவான வணக்கம். வால்பாறை பகுதியில் தொடர்ந்து வனவிலங்கு தாக்குதலால் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்படுகிறது. அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. கடந்த காலங்களில் வனவிலங்குகள் இப்பகுதியில் இருப்பவர்களின் குடியிருப்புக்கு அருகே வந்தால் வேட்டைத் தடுப்பு காவலர்கள், வேட்டைத் தடுப்பு வாகனங்கள் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வனவிலங்குகளை வனத்திற்குள் அனுப்பி விடுவார்கள்.
பொதுமக்கள் நிம்மதியாக இருப்பார்கள். தற்பொழுது அனைத்தும் கேள்விக்குறியாக உள்ளது. வனத்துறையின் வேலை வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் கட்டணங்களை வசூல் செய்வது,இரவு நேரங்களில் வனவிலங்குகளை பார்ப்பதற்கு வாகனங்களை அனுமதிப்பது,எதிர்பாராத விதமாக வனவிலங்குகளால் உயிரிழந்தவரின் உடலை விரைவில் அடக்கம் செய்வதற்கு குடும்பத்தாரை அச்சுறுத்துவதும் தொடர்கதையாகிறது. இதனால் அரசுக்கும் ஆட்சியாளருக்கும் சாமானிய மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அடர்ந்த வனப்பகுதிகளில் வனவிலங்குகள் விரும்பி உண்ணும் பழ வகைகள், குடிநீர் வசதியும் வனத்தை ஒட்டிய பகுதியில் அகழியும், குறைந்த மின்சக்தி உள்ள மின்வேலியும், அதிக வேட்டைத் தடுப்பு காவலர்களை பணியில் அமர்த்தவும், சுற்றுலாப்பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து கொடுப்பதற்கும் தாங்களும், பொள்ளாச்சி சார் ஆட்சியாளரும் மாவட்ட வன அலுவலரும் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து அரசு உயர் அதிகாரிகளும் இப்பகுதியில் உள்ள சமூக அமைப்பில் உள்ள நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்த பொதுநலத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அரசுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பரமசிவம் கூறுகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து விரைவில் வால்பாறையில் இதுகுறித்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் தவறும் பட்சத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
-M.சுரேஷ்குமார்.