விளாத்திகுளம் அருகே சாலைப் பணிகள் முடிந்து 10 நாட்கள் கூட ஆகல… படுமோசமான நிலையில் காணப்படும் சாலைகள் : விபத்து ஏற்படும் அபாயத்தில் பயணிக்கும் மக்கள் : அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் – இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி, கமுதி போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையில் K. சுப்பையாபுரம் கிராமத்திலிருந்து காடல்குடி வரை சாலை நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் சுமார் 5Km தொலைவிற்கு சாலைகள் மற்றும் 4 பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இப்பணிகள் முடிவடைந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், சாலைகள் தரமற்ற முறையில் போடப்பட்டதன் காரணமாக பல இடங்களில் சாலையில் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பாலத்தின் அருகில் இருபுறமும் 2 அடி ஆழத்திற்கு சாலைகள் பள்ளமாகவும் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் முதல் நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
ரூ.7 கோடி மதிப்பில் புதிதாக போடப்பட்டுள்ள இச்சாலைகள் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதன் காரணமாக பணிகள் முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில் இவ்வாறு போக்குவரத்து லாயக்கற்ற நிலையிலும், அபாயகரமான சாலையாகவும் மாறி காட்சியளிக்கிறது.
இதனால் இந்த சாலையில் பெரிய விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்சேதங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, இச்சாலையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்துத்தர நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, இத்தகைய விபத்து ஏற்படக்கூடிய வகையில் தரமற்ற முறையில் சாலைகள் அமைத்த விளாத்திகுளம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
நாளைய வரலாறு செய்திக்காக,
விளாத்திகுளம் செய்தியாளர்,
-ந.பூங்கோதை.