எட்டையபுரம் அருகே “கண்மாய்க்குள்ளே போடப்பட்ட சாலை” ; ரூ.32 லட்சத்தை வீணடித்த அதிகாரிகள் ; தரைப்பாலம், மேம்பாலம் அமைக்காவிடில் விவசாய நிலங்கள் நாசமாகிவிடும் என விவசாயிகள் வேதனை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்: 2021-2022-ன் கீழ் சிந்தலக்கரை கிராமத்திலிருந்து – துரைச்சாமிபுரம் வரை ஓரடுக்கு கற்சாலை அமைக்கும் பணிக்கு ரூ.32.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தது. எந்த ஒரு அடிப்படை திட்டமிடல் இன்றி நீரோடையை மறித்தும், கண்மாய்க்கு உள்ளேயும் இச்சாலை அமைக்கப்பட்டதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீர் தேங்கி பாதிப்புக்குள்ளாகும் அபாயமான சூழ்நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சிந்தலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் தனது சுயலாபத்திற்காக தனது சொந்த விவசாய நிலத்திற்கு செல்வதற்காக இச்சாலை அமைக்க வேண்டும் என்று எண்ணியதோடு கோவில் நிர்வாகிகளிடமும் எந்த அனுமதியும் பெறாமல் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் வழியாக இச்சாலை அமைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
மேலும் ஒரு மழைக்கே தாங்காத வகையில் இச்சாலையானது மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், நீரோடைப் பாதையில் கண் குழாய்கள் அமைத்து தரைப்பாலங்கள் போடாமல் அப்படியே நீரோடையை மறித்து சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் மழை வெள்ளநீர் நிலங்களில் தேங்கி தங்களின் விவசாயம் பெரிது பாதிக்கப்படும் என்று அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள்.
இவற்றையெல்லாம் விட… விவசாய நிலங்களுக்கு மத்தியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள கண்மாயில் உரிய மேம்பாலம் அமைத்து இச்சாலையை போடாமல், சிறிதளவு கூட விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் கருத்தில் கொள்ளாமல் கண்மாயின் கரைகளை உடைத்து என் கண்மாய்க்கு உள்ளேயே சாலை அமைத்து விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர் அதிகாரிகள்…. மேலும் தார்சாலையாக இல்லாமல் கற்சாலையாக அமைக்கப்பட்டதால் ஒரு மழைக்கு கூட இந்த சாலைகள் தாங்காமல் பெயர்ந்து பயன்படுத்துவதற்கு முற்றிலும் லாயக்கற்ற நிலையில் இருப்பதால் நீரோடை செல்லும் இடங்களில் முறையான கண் குழாய்கள் அமைத்து தரைப்பாலங்களும், அதேபோன்று கண்மாய் கரையினை பலப்படுத்தி மேம்பாலம் அமைத்து இச்சாலையை சீரமைத்துக் கொடுத்தால் மட்டுமே விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் தவறும் பட்சத்தில் அரசின் ரூ.32.11 லட்சம் பணம் அதிகாரிகளால் வீண் விரயம் செய்யப்பட்டது என்பதை நிதர்சனமான உண்மை என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.