தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காடல்குடி – பூதலபுரம் செல்லும் சாலையைப் பயன்படுத்தியே சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் அன்றாட வேலைகளுக்கு செல்வோர் என அனைவரும் சென்று வருகின்றனர்.
இச்சாலையானது போடப்பட்ட 2 ஆண்டுகளுக்குள்ளாகவே முற்றிலும் சிதலமடைந்து தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இச்சாலையை கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அச்சத்தில் தான் கடந்து செல்வதாக தெரிவிக்கின்றனர்.
அதிலும், மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக காணப்படும் இச்சாலையில் மழைநீர் தேங்கி சாலையே தெரியாத அளவில் இருப்பதால் இச்சாலை வழியாக செல்லும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடுதலாக 7 கிலோமீட்டர் சுற்றி மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மேலும், சாலையின் இருபுறமும் வேலி செடிகளின் ஆக்கிரமிப்பால் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் இரண்டு வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
.குறிப்பாக, இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாமல், குண்டும் குழியுமாக இருந்து வரும் இந்த படுமோசமான சாலையில், இருபுறமும் வேலிச்செடி சூழ்ந்திருப்பதால் மிகவும் ஆபத்தான சூழலில்தான் இப்பகுதியைச் சேர்ந்த பல கிராமமக்கள் இச்சாலையை கடந்து சென்று வருகின்றனர்.
ஆகையால், வரக்கூடிய மழைக்காலத்திற்கு முன்பாகவே. மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் காட்சி அளிக்கும் இச்சாலையை சீரமைத்து, சாலையின் இரு புறம் படர்ந்து காணப்படும் வேலிச்செடிகளை அப்புறப்படுத்தி போதுமான மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.