
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே தொடர்ந்து வருகிறது. விதிமுறைகளை மீறி டிராக்டரில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்றபோது ஏற்பட்ட விபத்து இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இன்று (28.01.2026) காலை உருளக்கல் பெரியார் நகர் பகுதியில் இருந்து வரட்டுப்பாறை காபி எஸ்டேட்டுக்கு டாட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான டிராக்டரில் தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பல தொழிலாளர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.
தேயிலை மற்றும் காபி எஸ்டேட்களில் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பணி இடங்களுக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்ல பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால் எஸ்டேட் நிர்வாகங்கள் செலவை மிச்சப்படுத்த டிராக்டர்களில் ஆடுகளைப் போல் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.
சாதாரண மக்கள் இருசக்கர வாகனத்தில் சென்றால் சட்டவிதிமுறைகளை பேசி அபராதம் விதிக்கும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் (RTO) இவ்வளவு பெரிய விதிமீறல்களைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்.? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு வழங்கும் ஊதியத்தைத் தாண்டி தனியார் நிறுவனங்களின் சலுகைகளுக்காக அதிகாரிகள் வளைந்து கொடுப்பதாலேயே இத்தகைய விபத்துக்கள் தடையின்றி நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் கூறுகையில் நாங்கள் நவீன கால பரதேசி களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சம்பளத்தில் சந்தா மட்டும் சரியாகப் பிடிக்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு குறித்து கேட்டால் நிர்வாகத்திடம் அனுசரித்துப் போ என்று தொழிற்சங்கத் தலைவர்கள் எங்களை அவமானப்படுத்துகிறார்கள் என வேதனையுடன் தெரிவித்தார்.
விபத்து நடக்கும்போது மட்டும் நாடகமாடும் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது தொழிலாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்த விபத்திற்கு எஸ்டேட் நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் தரமான சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் டிராக்டரில் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதை அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
வால்பாறை 𝙿.பரமசிவம்.













