
அடுக்குமாடி குடியிருப்புகளில் பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்புக்கான தொடர் மக்கள் சந்திப்பு முகாம்
கோவை மாநகர காவல்துறையின் டி3 போத்தனூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களிடம் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று (07.06.2026) நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள களிறு அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டு, முதியோர்களை குறிவைத்து நடைபெறும் வங்கி மற்றும் இணையவழி மோசடிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் ஏமாற்று செயல்கள், ஆன்லைன் பண மோசடிகள், போலி முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
மேலும், “குற்றம் நடந்த பிறகு காவல்துறையை அணுகுவதை விட, குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்த பாதுகாப்பு” என்பதை வலியுறுத்தி, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
டி3 போத்தனூர் காவல் நிலையம் சார்பில் முதல் கட்டமாக களிறு அப்பார்ட்மெண்ட், ஆர்.ஆர். அப்பார்ட்மெண்ட், சாய் நகர் அபர்ணா அப்பார்ட்மெண்ட், வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் நஞ்சுண்டாபுரம் ஆர்.ஆர். துர்யா குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு வளாகங்களில் நேரடி மக்கள் சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் மூலம் முதியோர் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சைபர் குற்றத் தடுப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு, குடியிருப்பு பாதுகாப்பு, அவசர உதவி எண்களின் பயன்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மற்றும் காவல்துறை இடையேயான நல்லுறவை வலுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் குற்றமற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி குடியிருப்புவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், காவல்துறையின் மக்கள் நட்பு அணுகுமுறைக்கு பாராட்டுகளும் குவிந்தன.
“மக்களைத் தேடி காவல்துறை – பாதுகாப்பை நோக்கி சமுதாயம்” என்ற நோக்கத்துடன் டி3 போத்தனூர் காவல்துறையின் இந்த தொடர் விழிப்புணர்வு பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.













