கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை வடக்கு தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடி கைது!! கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சி துணை தலைவராக இருப்பவர் சின்னராஜ் (வயது 61). இவர் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இந்திரா காந்தி வணிக வளாகத்தில் உள்ள கடைகளை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த ஏலத்தில் பங்கேற்க நான் முடிவு செய்தேன்.
இதையடுத்து எனக்கு ரூ.5 லட்சத்திற்கான சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கக்கோரி வருவாய்த்துறையினரிடம் விண்ணப்பித்தேன்.
எனது விண்ணப்பித்தினை பரிசீலனை செய்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் எனது சொத்து மதிப்பை கணக்கீடு செய்து எனக்கு ரூ.15 லட்சம் வரை சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கலாம் என்று குறிப்பிட்டனர்.
இதையடுத்து நான் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தை அணுகி எனக்கு சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கும்படி ஊழியர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், தாசில்தார் கோகிலாமணியை அணுகி சான்றிதழ் பெற்றுக் கொள்ளும்படி கூறினர்.
இதையடுத்து நான் தாசில்தார் கோகிலாமணியை சந்தித்து சான்றிதழ் வழங்கும்படி கேட்டேன். அப்போது அவர் என்னிடம் ரூ.25 ஆயிரம் வழங்கினால்தான் சான்றிதழ் தருவதாக கூறினார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், சின்னராஜிடம் ரூ.25 ஆயிரத்துக்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர் கோவையில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்த தாசில்தார் கோகிலாமணியை சந்தித்து ரூ.25 ஆயிரம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக தாசில்தார் கோகிலாமணியை பிடித்து கைது செய்தனர். பின்னர் அந்த அலுவலகத்துக்குள் யாரையும் வர அனுமதிக்க வில்லை. அத்துடன் அலுவலகத்தில் இருந்து வெளியே யாரையும் விடவில்லை. அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களும் சுவிட்ச்-ஆப் செய்ய போலீசார் கூறினார்கள். இதையடுத்து போலீசார் தாசில்தார் அறையில் இருந்த மேஜை, அலுவலக வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.