சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டம், கடந்த 2016ஆம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்கள் உள்ளடங்கிய சிங்கம்புணரி வட்டம் உருவாக்கப்பட்டது.
வட்டத் தலைநகருக்கான வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம் போன்ற அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், சிங்கம்புணரி வட்டத்திற்கான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கி தனியாக உருவாக்கப்படாமல் திருப்பத்தூரில் இருந்தே செயல்பட்டு வந்தது.
எனவே, போக்குவரத்துச் செலவு மற்றும் கால விரயத்தைத் தவிர்க்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கியை சிங்கம்புணரியிலேயே தனியாக அமைத்துத்தருமாறு கடந்த 6 ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்தது.
இந்நிலையில், நேற்று சிங்கம்புணரியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் சிங்கம்புணரி வட்டத்திற்கான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 2000 மெட்ரிக் டன் கொள்ளவுள்ள செயல்முறை வட்டக் கிடங்கை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அவர்கள் தலைமை வகித்த இந்த நிகழ்வில், சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து மற்றும் துணைத்தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் நத்தர்ஷா, சிங்கம்புணரி வட்ட வழங்கல் அதிகாரி நேரு, கூட்டுறவு சார்பதிவாளர் மணிவண்ணன்,திமுக மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கணேசன், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர அவைத் தலைவர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மனோகரன், தொழிலதிபர்கள் ஆர்.எம்.எஸ்.சரவணன், கே.ஆர்.ஏ.கணேசன் மற்றும் குடோன் சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த செயல்முறை வட்டக்கிடங்கிலிருந்து சிங்கம்புணரி வட்டத்திலிருக்கும் 145 சத்துணவு மையங்களுக்கும், 163 அங்கன்வாடி மையங்களுக்கும், 70 நியாயவிலை கடைகளுக்கும், 10 மாணவர்கள் விடுதிகளுக்கும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் சப்ளை செய்யப்பட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது. உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன் இந்த கிட்டங்கியின் பொறுப்பாளராக செயல்பட உள்ளார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.