வால்பாறை நகர் பகுதியில் ஒரே ஒரு மெயின்ரோடுதான் உள்ளது. இங்குள்ள தபால் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை ஒரு கி.மீ. தூரத்துக்கும் குறைவாகவே இந்த சாலை உள்ளது.
இந்த ரோட்டைதான் வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த எஸ்டேட் பகுதி மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். அத்துடன் ஆம்புலன்ஸ், பஸ்கள் என வால்பாறைக்கு வரும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாகதான் செல்ல வேண்டும்.
இந்த ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது கால்நடைகள் சாலையில் தாராளமாக சுற்றி வருகிறது.
இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தினந்தோறும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கூட்டங்கூட்டமாக மாடுகள், ஆடுகள் என்று கால்நடைகள் ஹாயாக சாலையில் உலா வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். அவர்கள் எந்த சுற்றுலா மையங்களுக்கு சென்றாலும் இந்த மெயின் ரோடு வழியாகதான் வர வேண்டும். ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கால்நடைகள் சாலையில் உலா வருகிறது.
சில நேரத்தில் அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, வாகனங்களில் செல்பவர்கள் மீது பாய்கிறது. மேலும் நடந்து செல்பவர்களை தாக்கவும் செய்கிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
மேலும் வால்பாறையை சுற்றிலும் வனப்பகுதிகள்தான் அதிகம். கால்நடைகள் சாலையில் உலா வருவதால் அவற்றை வேட்டையாட சிறுத்தைகளும் குடியிருப்புகளை நோக்கி வருகிறது.
எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் உலா வரும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.