கோவை நாகசக்தி அம்மன் பீடத்தில் அனைத்து சாதி பிரிவினரும் கருவறைக்குள் பால் அபிஷேகம் செய்தனர்!!

சாதி வேறுபாடின்றி கருவறையில் பூஜை மற்றும் அபிஷேகம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக கோவை நாகசக்தி அம்மன் பீடத்தில் அனைத்து சாதி பிரிவினரும் கருவறைக்குள் பால் அபிஷேகம் செய்தனர். கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிலையத்தில்,நிறுவனர் சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள்,கொரோனா வைரஸ் முதல் அலை துவங்கியது முதல், வைரஸை தடுப்பதற்கான நிலவேம்பு கசாயம் எப் 2 கே மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை கோவை உட்பட தமிழகம் முழுவதும் வழங்கி வந்தார்.மேலும் முதல்,இரண்டாம்,மூன்றாம் அலைகளின் போது கொரோனா வைரசிலிருந்து மக்களை காக்கும் விதமாக பல்வேறு பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்கள் செய்தார்…இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் திட்டத்தை வரவேற்கும் விதமாக கருவறைக்குள் அனைத்து சாதியினரும் அபிஷேகம் மற்றும் பூஜை செய்ய அனுமதிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாகசக்தி அம்மன் பீடத்தைச் சேர்ந்த பாபுஜி சுவாமிகள்,சாதி பிரிவுகள் இன்றி,அனைத்து சாதி பிரிவினரும் கருவறைக்குள் அபிஷேகம் செய்வதால் ஒருபோதும் அம்மனுக்கு தீட்டு படாது என்றும் மாறாக புனிதமே என்றும் அவர் கூறினார். இந்த உயரிய நோக்கத்தை தற்போது முதன்முதலாக செய்யும் நாகசக்தி அம்மன் பீடம் முன்னெடுத்து உள்ளதாகவும் அவர் கூறினார். இது போன்ற நிகழ்வு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழும் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். நடைபெற்ற சிறப்பு பாலாபிஷேகம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts