சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கேட்பு அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட நாட்களுக்குள் வரி செலுத்தவில்லையேல், சொத்து பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு, 100 வார்டுகளிலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட வரி இனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஆதாரங்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது.
நடப்பு, 2021-22ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான வரியினங்களை, விரைந்து செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுவருகிறது.மாநகராட்சியில், 5.46 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். இவர்களிடம் நிலுவை வரி, 160.61 கோடி ரூபாய், நடப்பு நிதியாண்டு வரி, 206.44 கோடி ரூபாய் என, மொத்தம், 367.05 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், இன்னும் பலர் வரி செலுத்தாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். அவ்வாறு செலுத்தாதவர்களுக்கு சொத்து வரிக்கான கேட்பு அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. அதாவது, அறிவிப்பு பெற்ற, 15 நாட்களுக்குள் குறிப்பிட்டுள்ள தொகை முழுவதையும் கணினி வசூல் மையங்களில் செலுத்துமாறும், குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்தாத பட்சத்தில், சொத்து பறிமுதல் செய்யப்படும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வருவாய் பிரிவினர் கூறுகையில், ‘2020-21(முதல் அரையாண்டு), 2021-22 முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான, சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கேட்பு அறிவிப்பு வழங்கி வருகிறோம். அறிவிப்பு பெற்ற, 15 நாட்களுக்குள் தொகை முழுவதையும் செலுத்த வேண்டும். ஏன் செலுத்தவில்லை என்பதற்கு, தகுந்த காரணம் காட்டாத நிலையில், சம்பந்தப்பட்டவரின் சொத்தை பறிமுதல் செய்ய, தமிழ்நாடு மாவட்ட நகராட்சியின் சட்டம், 36வது பிரிவின்படி கைப்பற்றாணை பிறப்பிக்கப்படும். அதன்பிறகும், வரியும், கட்டணமும் செலுத்தப்படாமல் இருந்தால், சொத்து பறிமுதல் செய்யப்படும்’ என்றனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.