கருணைப்பயணக் கிறிஸ்த்துவக் காப்பகத்தில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆதரவற்றோர்! கோவையில் பரபரப்பு!!

கோவை மாநகரில் சாலையில் தங்கிய ஆதரவற்றவர்கள் மற்றும் பணிக்குச் சென்றவர்கள், பேருந்துக்கு காத்திருந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோரை, கிறிஸ்த்துவ தன்னார்வ அமைப்பினர் தூக்கிச் சென்று, தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பகுதியில் அடைத்து வைத்து மொட்டையடித்து துன்புறுத்திய சம்பவத்தில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஜிபின் பேபி (44), சைமன் செந்தில்குமார் (44)
ஜார்ஜ் (54) செல்வின் (49) பாலச்சந்திரன் (36) அருண் (36) ஆகிய ஆறு பேர் மீது தொண்டாமுத்தூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சம்பவம் குறித்து முழு விவரம்:

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அருகேயுள்ள அட்டுக்கல் என்ற கிராமத்தின் மலை அடிவாரத்தில், கிறிஸ்தவ மிஷினரிக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட விடுதியில், 100 க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் சமீபத்தில் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, மீட்டு, உரிய சிகிச்சை மற்றும் விடுதிகளில் சேர்த்து வருகின்றனர்.

அதன்படி, ஆதரவற்றோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் விழுப்புரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ
தன்னார்வ நிறுவனம் ஒன்று, கடந்த இரு தினங்களாக, அடையாளம் தெரியாத 100 க்கும் மேற்பட்ட நபர்களை வாகனங்களில் அழைத்து வந்து, அட்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள தடைசெய்யப்பட்ட விடுதியில், சட்டவிரோதமாக அடைத்து வைத்து, துன்புறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வந்தனர்.

மேலும், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதி ஒரு கிறிஸ்தவ மிஷினரியை சேர்ந்தது என்றும் அனுமதியின்றி செயல்பட்ட குற்றத்திற்காக, அந்த விடுதியை வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து மூடியதாகவும் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களாக அந்த விடுதியில் இருந்து இரவு நேரங்களில், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்..! என்று அழுகும் குரல் கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வந்தனர்.

இதையடுத்து, உள்ளூர் மக்கள் அந்த விடுதிக்கு சென்று நேரில் பார்த்த போது, அங்கு 10 க்கும் மேற்பட்ட அறைகளில் 100 க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்தும், அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டிருந்ததும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அவர்கள் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த நபர்கள் அனைவரும் ஆதவற்றவர்கள் இல்லை என்பதும் அதில் பலர், சாலையில் தூங்கிய பணியாளர்கள், பேருந்துக்காக காத்திருந்த முதியவர்கள் என்பதும் வலுக்கட்டாயமாக அவர்களை அழைத்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து, அங்கு துன்புறுத்தலுக்கு ஆளானவர் கூறுகையில், கோவை காந்திபுரம் பகுதிகளில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், பணி முடிந்து வந்து கொண்டிருந்த போது, வலுக்கட்டாயமாக, தன்னை இங்கு தூக்கி வந்ததாக தெரிவித்தார்.

கோவில் முன்பு அமர்ந்து இருந்தவர்கள், பேப்பர் படித்து கொண்டு இருந்தவர்கள் என பலரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி இந்த விடுதிக்கு கொண்டு வந்து அடைத்தனர். பின்னர், தங்கள் கையில் இருந்த பொருட்கள், பணம், செல்போன் போன்றவற்றை பறித்து அவற்றை தீ வைத்து எரித்தனர். மேலும், அந்த விடுதியில் இருந்து தப்பிக்க, காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டவர்களை பைப், குச்சி கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியதாக, குற்றம் சாட்டினர்.

சட்டவிரோதமாக ஆதரவற்றோர் என்ற பேரில் மக்களை கடத்தி துன்புறுத்தி வந்த சம்பவம், அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியதால், இந்து அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர், அந்த தனியார் விடுதியை முற்றுகையிட்டனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் வட்டாசியர் காந்திமதி, அந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட நபர்களின் பெயர், முகவரி போன்ற தகவல்களை பெற்றுக் கொண்டு அவர்களை வாகனம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தார்.

இதனால், ஆத்திரம் அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் அமைப்பினர், மனித உரிமை மீறல், ஆள் கடத்தல் மற்றும் சீல் வைக்கப்பட்ட விடுதியை சட்ட விரோதமாக பயன்படுத்திய குற்றத்திற்காக சமந்தப்பட்ட அமைப்பினர் மீது உரிய விசாரணை மற்றும் வழக்குப் பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்ட நபர்களை எப்படி அனுப்ப முடியும், என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்த வாகனத்தை கவிழ்த்தியதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட எஸ். பி. பத்ரிநாராயணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அங்கு தங்க வைக்கப்பட்ட நபர்களில், குடும்பம் உள்ளவர்களை அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவும், ஆதவற்றவர்களை அரசு காப்பகங்களிலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல காப்பகங்களுக்கும் அனுப்பி வைக்கும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, விடுதியில் இருந்த 131 நபர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

அரசால் தடை செய்யப்பட்ட கருணைக்காப்பகம் விடுதியில், சட்டவிரோதமாக மக்களை அடைத்து வைத்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த 10 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உதவி ஆணையாளர் தலைமையில் போலீசார், அட்டுக்கல் பகுதியில் உள்ள அந்த கருணைப்பயணம் காப்பகப் பகுதியில் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

-Ln. இந்திராதேவி முருகேசன் / சோலை. ஜெய்க்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts