கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ‘மல்டி லெவல் பார்க்கிங்’ நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிரள வைக்கிறது. ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பில் ‘மாதிரிச்சாலை’யாக மாற்றப்பட்டுள்ளது. இதே ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடியே 78 லட்சம் மதிப்பில் அதி நவீன ‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் செயல்பாடு குறித்து, டிரையல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ‘பார்க்கிங்’ 2.8 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 8250 சதுர அடி பரப்பில் நான்கு தளங்களைக் கொண்ட ‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் தலா 50 சதவீத நிதி பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த ‘பார்க்கிங்’கில் ஒரே நேரத்தில் 373 கார்களை நிறுத்த முடியும். தரை தளத்தில் 2.5 மீட்டருக்கு அதிகமான உயரமுள்ள 49 பெரிய கார்களை நிறுத்துவதற்கு வசதி உள்ளது. மீதமுள்ள மூன்று தளங்களில் 324 கார்களை நிறுத்தலாம்.
இங்கு கார் நிறுத்த வருவோர் நுழைவாயிலின் அருகேயுள்ள கவுன்டரில் காரை ஒப்படைத்து விட்டு அங்கே கொடுக்கப்படும் ‘சிப்’ பொருத்தப்பட்ட டோக்கனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த காரை பயிற்சி பெற்ற டிரைவர்கள் தரை தளத்திலுள்ள ‘லிப்ட்டில் நிறுத்தி விட்டு இறங்கி வந்து விடுவார்கள். ஐந்து லிப்ட்களிலும் கார்கள் நிறுத்தப்பட்ட பின் லிப்ட் கதவுகள் மூடப்பட்டு மேலே செல்லும். ஒவ்வொரு காரும் நிறுத்தப்படும் இடம் கம்ப்யூட்டரிலேயே ‘செட்’ செய்யப்பட்டு விடும். அதன்படி, அந்தந்த தளத்தில் அதற்குக் குறிக்கப்பட்ட இடத்தில் போய் கார் நிறுத்தப்படும். இவை அனைத்தும் தானியங்கி முறையிலேயே செயல்படும் வகையில், Scada மற்றும் PMS System போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் ‘சீகர்’ என்ற நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளது. காரை மீண்டும் எடுக்கும்போது அதே போல லிப்ட்டில் கார் கீழே வரும். அங்கிருந்து பயிற்சி பெற்ற டிரைவர் காரை எடுத்து வந்து உரியவரிடம் கொடுப்பார். மின்சாரம் தடைபடும் நேரங்களில் சிஸ்டத்தை இயக்குவதற்காக 800 கே.வி. திறனுள்ள டீசல் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
தரைதளத்தில் மிகவும் விசாலமான காத்திருப்பு அறை உள்ளது. ஷாப்பிங் செல்வோருடன் வரும் வயதானவர்கள் நடக்க இயலாதவர்கள் இருந்தால் இங்கு ஓய்வெடுக்கலாம். அருகிலேயே நவீன கழிப்பிட வசதிகளும் உண்டு.
இந்த ‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’கில் பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஏதாவது ஒரு வாகனத்திலிருந்து புகை வந்தாலும் உடனடியாக ‘அலாரம்’ அடித்து (Fire Fighting System) சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் இருந்து நீர் ‘ஸ்பிரிங்ளர்’ முறையில் பீய்ச்சி அடிக்கத்துவங்கிவிடும். இதற்காக மொட்டை மாடியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர்த் தொட்டியும், தரைதளத்தில் மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளன. வளாகம் முழுவதும் ‘சிசிடிவி’ கேமராவால் கண்காணிக்கப் படுகிறது. டிரைவர்களுக்கு ஓய்வு அறை, பொருட்கள் வைக்கும் அறை என,அனைத்து வசதிகளும் உள்ளன.
கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. டி.பி.ரோட்டில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் அவர்களின் கார்களை நிறுத்துவதற்கு மாதாந்திர கட்டணமும் நிர்ணயிக்கப் படவுள்ளது. அதை மாநகராட்சி கவுன்சில் முடிவு செய்யும்.
இந்த வளாகத்தில் இன்னும் நிறைய இடவசதி இருப்பதால் 500 டூ வீலர்களை நிறுத்துவதற்கான ‘பார்க்கிங்’ அமைத்து வருவாயை அதிகப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வளாகத்துக்குள் விளம்பரங்கள் வைக்கவும், கார் வாஷ், மெக்கானிக் ஷாப், கார் அலங்காரப் பொருட்கள் விற்பனை யாளர்களுக்கு வாடகைக்குக் கொடுத்து, வருவாய் ஈட்டவும் ஆலோசனை நடந்து வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.