வாவ்….சூப்பர் மூன்.!

என்ன பார்க்கிறீர்கள்? நிலவும் நிலவொளியும் எப்போதுமே ‘சூப்பர்’ தான். அப்படியிருக்க அந்த சாதாரண நிலவு ‘சூப்பர் மூன்’ என்று பெயர் தாங்கி வந்தால் எப்படி இருக்கும்! பார்க்க ஆவலாக இருக்கிறது தானே? ஆச்சரியம் வேண்டாம். நம் ‘குரு பூர்ணிமா’ தான் உலகின் ‘சூப்பர் மூன்’.

சரி. சூப்பர் மூன் என்றால் என்ன ?

நிலவு அதன் சுற்றுப்பாதையில், பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதே நேரத்தில் முழுநிலவாக இருக்கும் போது சூப்பர் மூன் அதாவது பெருநிலவு எனப்படுகிறது.

நிலவு பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. எனவே, ஒரு புள்ளியில் நிலவு பூமிக்கு மிக அருகிலும், இன்னொரு புள்ளியில் தொலைவிலும் சென்றுவரும். நீள்வட்டப்பாதையின் மிகத் தொலைதூரப் புள்ளி என்பது அப்போஜீ (apogee) என்று அழைக்கப்படும்.
இது பூமியில் இருந்து சராசரியாக நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து ஐநூறு கிலோமீட்டர் (405,500 kilometers) தொலைவில் உள்ளது.

மிக அருகில் உள்ள புள்ளி பெரிஜீ (perigee) என்று அழைக்கப்படுகிறது. இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று லட்சத்து மூன்றாயிரத்து முந்நூறு கிலோமீட்டர்கள் (363,300 kilometers) தொலைவில் உள்ளது.

எனவே, முழு நிலவானது பூமிக்கு மிக அருகில் உள்ள பெரிஜீ புள்ளியில் தோன்றும் போது சற்று பிரகாசமாகவும் வழக்கமான முழு நிலவை விட பெரிதாகவும் தோற்றமளிக்கும். இதைத்தான் சூப்பர்மூன் அதாவது பெருநிலவு என்று அழைக்கிறோம்.

ஓராண்டில் மூன்று அல்லது நான்கு முறை சூப்பர்மூன் தோற்றமளிக்கும். சூப்பர்மூனை பார்வையின் மூலம் வேறுபடுத்திப் பார்ப்பது கடினமானது. ஆனால், அது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும். நிலவு பூமிக்கும் மிக அருகில் வரும் போது வழக்கத்தை விட அதிகமான கடல் அலைகள் ஏற்படும். மிக நெருக்கமான புள்ளியில் காட்சியளிக்கும் முழு நிலவு, ஆண்டின் மங்கலான நிலவை விட 17 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும். .

இந்திய மற்றும் இலங்கை நேரப்படி ஜூலை 14-ம் தேதி அதிகாலை 12 மணி 8 நிமிடங்களில் தோற்றமளிக்கும் ‘சூப்பர் மூன்’ , செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வழக்கத்தைவிட அதிகம் பிரகாசிக்கும்.

எங்க கெளம்பீட்டீங்க? ஓ….சரி சரி…..’சூப்பர் மூனை’ பார்த்து ரசீங்க!

-Ln. இந்திராதேவி முருகேசன் / சோலை. ஜெய்க்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts