பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள 9 அணைகளிலும் காலாவதியான மதகு, சங்கிலி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளையும் போர்க்கால அடிப்படையில் மாற்றக் கோரி பொள்ளாச்சியில் உள்ள பிஏபி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தின் மிகப்பெரிய அணையான பரம்பிக்குளம் அணையின் மூன்று மதகுகளில் நடுமதகு கடந்த செவ்வாய்க்கிழமை (20-09-2022) இரவு சுமார் 1.15 மணி அளவில் உடைப்பு ஏற்பட்டு கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக தேக்கி வைக்கப்பட்ட 6 டிஎம்சி தண்ணீர் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
உடைப்பு ஏற்பட்ட இடத்தை முழுமையாக ஆய்வு செய்ததில் அணையின் மதகை ஏற்றி இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் சங்கிலியின் ஆயுட்காலம் காலாவதியாகி விட்டதால் பலம் இழந்து அறுந்து விழுந்ததால் மதகின் மறுமுனையில் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் முப்பது டன் எடை கொண்ட எதிர்புற கான்கிரீட் எடைக்கல் மறு புறமாக இருந்து கீழே விழும்போது அணையின் மதகை பலமாக தாக்கியதால் அணையின் மதகு ஒரு புறமாக திரும்பி பெரும் சத்தத்துடன் அணையிலிருந்து கீழே விழுந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் மீதம் இருக்கும் இரண்டு மதகுகளும் பலமிழந்து துருப்பிடித்து உள்ளது.தூணக்கடவு அணையின் மதகுகளிலும் துருப்பிடித்து ஓட்டை விழுந்து ஆங்காங்கே சிறிய அளவில் நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
பரம்பிக்குளம் அணையில் மட்டுமல்ல, பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அணை, முக்கொம்பு அணை, ஊத்தங்கரை பாம்பாறு அணை ஆகியவற்றின் மதகுகள் சேதம் அடைந்து நீர் வெளியேறியுள்ளது. அதற்குப் பின்பும் நீர்வள ஆதாரத்துறை மற்ற அணைகளில் உள்ள மதகுகளை மாற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு தான் தற்போது பரம்பிக்குளம் அணையின் மதகு உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு மேற்கொண்டும் நீர்வள ஆதாரத்துறை போர்க்கால அடிப்படையில் தமிழ்நாட்டில் இயக்கத்தில் உள்ள அனைத்து அணைகளில் 40 ஆண்டுகளை கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அணைகளின் மதகு மற்றும் சங்கிலிகளை மாற்றாமல் இருந்தால் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற விபத்துக்கள் தொடர்வதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே பிஏபி விவசாயிகள் சார்பில் அனைத்து அணைகளின் மதகுகளையும் மதகு சங்கிலி உட்பட அனைத்து அமைப்புகளையும் உலக தரத்துடன் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாற்றக்கோரியும், பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது குறித்து விசாரிப்பதற்காக விசாரணை குழுவை அமைக்கக் கோரியும் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்
இன்று பொள்ளாச்சியில் உள்ள பிஏபி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பரம்பிக்குளம் ஆழியாறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளரை சந்தித்து உடனடியாக அனைத்து அணைகளின் மதகுகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
-துல்கர்னி, உடுமலை.