சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சிக் கட்டிடம் கட்ட, இடம் தேர்வு!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியின் அலுவலக கட்டிடம் 1950ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது.
நகரின் வளர்ச்சிக்கேற்ப பேரூராட்சியின் அலுவலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய போதிய இடவசதி இல்லாத காரணத்தால் புதிய கட்டிடம் கட்ட தற்போது முடிவு செய்யப்பட்டது.
அதையொட்டி நேற்று அனைத்து கட்சி கூட்டம், சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் தலைமை தாங்க, செயல் அலுவலர் ஜான்முகமது முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, ‘பேரூராட்சியின் தற்போதைய கட்டிடம் மிகவும் பழைமையான கட்டிடம். அதை விரிவாக்கம் செய்ய போதிய இடவசதி இல்லாத காரணத்தால், புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடமாக சீரணி அரங்கம் பகுதியைத் தேர்வு செய்வதாகவும், அது குறித்து அனைவரின் ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறும்’ பேசினார்.
அதைத் தொடர்ந்து அதிமுக நகரச் செயலாளர் வாசு பேசும்போது, கட்டப்படவுள்ள புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை அலுவலகப் பயன்பாட்டிற்குத் தவிர வர்த்தகப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தக் கூடாது எனத் கூறி ஆதரவு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் புதிய கட்டிடம் கட்டும் முடிவை வரவேற்று ஒருமனதாக ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru
மேலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகி ஒருவர் ‘சிறுவர் பூங்கா அருகே மஞ்சுவிரட்டு காளைகளுக்கு மணி செய்யும் தொழிலாளர்களை அங்கிருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்றவேண்டும்’ என்ற கோரிக்கையை எழுப்பினார். அதற்கு குறுக்கிட்ட திமுக கவுன்சிலர் மணிசேகரன், ‘சிங்கம்புணரி கோவிலுக்கு ஊழியம் செய்து கொண்டு, அதேவேளையில் சிறு தொழில் செய்து வரும் அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக்கூடாது. அவர்களுக்கு அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த பேரூராட்சித் தலைவர், அவர்களுக்கு நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என உறுதி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts