இரண்டு நாட்களாக கோவை மாநகரில் சுற்றிவந்த மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 5ம் தேதி பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் 6ம் தேதி விடுவிக்கப்பட்ட மக்னா யானை கடந்த இரு தினங்களுக்கு முன் அங்கிருந்து வெளியேறி பொள்ளாச்சி சேத்துமடை வழியாக நேற்று கோவை மதுக்கரை பகுதிக்கு வந்தது. மதுக்கரையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானை அங்கிருந்த ஒரு வீட்டின் சுற்றுப்புற சுவரை இடித்து தள்ளியது. அதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாத்திரங்களைக் கொண்டு சத்தங்கள் எழுப்பி யானையை விரட்ட முயற்சித்தனர். பின்னர் பி. கே. புதூர் பகுதியில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றிற்குள் யானை நுழைந்ததால் பணியாளர்கள் அச்சமடைந்து வெளியேறினர்.
அதனை தொடர்ந்து யானையைக் கண்காணிக்கும் பணி தீவிரமடைந்தது. இதில் 80க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் இணைந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நேற்றிரவு முழுவதும் யானை கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை குனியமுத்தூர் பகுதிக்குள் உலா வந்தது அதனை தொடர்ந்து புட்டு விக்கி பாலம், வழியாக தெலுங்குபாளையம் பகுதிக்கு சென்ற யானை பேரூர் பகுதியில் உள்ள SMS தனியார் கல்லூரி பின்புறம் தோட்டம் ஒன்றுக்குள் நுழைந்தது. அந்நிலையில் மக்னா யானையை பிடிக்க டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி கும்கி யானை அழைத்து வரப்பட்டது. சுமார் 5 மணி நேரம் தோட்டத்திற்குள் இருந்த மக்னா யானை தோட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவர்க் குழு மயக்க ஊசிகளை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மயக்கம் அடைந்த யானை அருகில் இருந்த வாழை தோப்புக்குள் நுழைந்தது. வாழை தோப்புக்குள் மயக்க நிலையில் நின்று கொண்டிருந்த மக்னா யானையை சின்னத்தம்பி கும்கி யானையின் உதவியுடன் வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றினர்.
பிடிப்பட்ட மக்னா யானையை மேட்டுப்பாளையம் ஊட்டி வழியில் உள்ள தெங்குமராடா வனப்பகுதியில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு விடுவிக்க உள்ளதாகவும் தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது கோவை மாநகரில் நுழைந்த இந்த யானை சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பிடிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.