சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் ஆயிரம் விவசாயிகள் தலா 1000 ரூபாய் பங்குத்தொகையைக் கொண்டு, ₹10,00,000 மூலதனத்தில் ‘சிவகங்கை தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனம்’ 2017ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மாதந்தோறும் தயாரிக்கப்படும் 8000 லிட்டர் மரச்செக்கு எண்ணெய் வகைகள் உள்ளூரில் விற்பனை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல திருப்பத்தூர், சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் வட்டார விவசாயிகளை ஒருங்கிணைத்து, ‘ஸ்ரீ ஆவுடைய விநாயகர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ 2020ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் நெல், கடலை, தேங்காய், கொப்பரை, தென்னை நார், மஞ்சி ஆகியவை கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் தமது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், சிங்கம்புணரி உழவர் சந்தையில் கடை அமைத்திட இடம் ஒதுக்கித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் இந்நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று கடைகள் அமைத்துக் கொள்ள தரைவாடகைக்கு இடம் ஒதுக்கித் தந்து உத்தரவிட்டார்.
அதன்படி இரு நிறுவனங்களும் தங்களது சொந்த நிதியிலிருந்து சிங்கம்புணரி உழவர் சந்தையில் உருவாக்கியுள்ள ‘பாரம்பரிய பல்பொருள் அங்காடி’ மற்றும் ‘சிறுதானிய மதிப்பு கூட்டு பொருள் அங்காடி’ ஆகிய இரண்டு அங்காடிகளையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேற்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், ‘ உழவர் சந்தைகள் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை இடைத்தரகர்கள் இன்றி நுகர்வோருக்கு சரியான விலையில் விற்பனை செய்ய தொடங்கப்பட்டதாகவும், அந்த உழவர் சந்தையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பாரம்பரிய பல்பொருள் அங்காடி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு விற்பனை மையத்தினை விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி சிறப்பாக செயல்படுமாறு’ அறிவுறுத்தினார்.சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், சிவகங்கை தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குனரும், தொழிலதிபருமான குடோன் சுப்பிரமணி வரவேற்புரையாற்றினார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் துணை இயக்குனர் தமிழ்செல்வி, ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அவற்றிற்கு அரசு அளிக்கும் நிதியுதவிகள்’ குறித்து உரையாற்றினார். ஸ்ரீஆவுடைய விநாயகர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் சுப்பிரமணி நன்றியுரையாற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விழாவிற்கான ஏற்பாடுகளை உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் சேவுகப்பெருமாள், சுகுமார், வையாபுரிப்பட்டி தியாகராஜன், செல்வகுமார், செல்வம், வேளாண்மை அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழி, புவனேஸ்வரி, வேளாண்மை உதவி அலுவலர் ரத்தினகாந்தி மற்றும் ராதா ஆகியோர் சிறப்புறச் செய்திருந்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.