சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அரசு மருத்துவமனை சுற்றுவட்டார பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அவரை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அய்யன்ராஜ் வரவேற்றார்.
மருத்துவமனையின் சுற்றுச்சூழல், உள் நோயாளிகளின் வார்டுகள், சமையலறை, ரத்தப் பரிசோதனை ஆய்வகம், நுண்கதிர் பிரிவு (ஈஜிசி, எக்ஸ்ரே), மருந்துகள் சேமிப்பு அறை, பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரத்த சுத்திகரிப்புப் பிரிவு அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள
உள் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கேட்டறிந்தார்.
விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். அதன் பின்பு பிரசவ வார்டு மற்றும் உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். சிங்கம்புணரி அரசு தாலுகா மருத்துவமனையை தரம் உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, சிங்கம்புணரி அரசு மருத்துவமனை, தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் போதுமான அளவில் மகப்பேறு மருத்துவர்கள், கூடுதல் செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தலைமை மருத்துவர் அய்யன்ராஜ் எடுத்துரைத்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட சுகாதார இணை இயக்குனர் கமலவாசன் மற்றும் மருத்துவர்கள் அருண் பிரசாத், சுபசங்கரி, கோபிநாத், சிவப்பிரியா, மருந்தாளுனர் சேகர், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-பாரூக் & ராயல் ஹமீது.