ஆடி கிருத்திகையை முன்னிட்டு மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்!!!

ஆடி மாதம் வரும் கார்த்திகை நாள் ஆடிக்கிருத்திகை என அழைக்கப்படுகிறது. தட்சிணியான காலத்தில் முதல் மாதமான ஆடி மாதத்தில்தான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகள் கிளம்பி அதில் இருந்து ஆறுமுகம் தோன்றி அதனை கார்த்திகை பெண்கள் வளர்த்ததாக ஐதீகம் உள்ளது. அந்த 6 கார்த்திகை பெண்கள் வானில் நிரந்தர நட்சத்திரமாக மாறினர். இதனால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு. இந்த பண்டிகையை குறிக்கும் வகையில் ஆடி மாதம் வரும் கார்த்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சாமிக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ராஜஅலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவர் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். இதேபோல மாலை 4. 30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சுப்பிரமணியர் கோவிலை வலம் வருகிறார்.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமியை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். பக்தர்கள் வருகையால் மலையடிவாரத்தில் வாகன நெரிசலும் காணப்பட்டது. கணுவாயை அடுத்த அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. சுப்பிரமணியர் படம் வைக்கப்பட்ட சிறிய தேர் கோவிலை சுற்றி வலம் வந்தது. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி வலம் வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல குருந்த மலை முருகன் கோவில், குமரன் குன்று முருகன் கோவில், காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி கோவில் என மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் ஆடிக்கிருத்திகை வழிபாடு நடந்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts