வாச்சாத்தி மலைக்கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தருமபுரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டையின் ஒரு பகுதியாக 1992, ஜூன் 20ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்தி எனும் மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய இந்த சோதனையின் முடிவில் அன்று மாலை, கிராமத்தின் நடுவில் உள்ள ஆலமரத்தின் அடியில் அந்த ஊர் மக்கள் அனைவரையும் ஒன்று திரளச் செய்த அரசு அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுமக்களை தாக்கி, அவர்களது உடைமைகளை சுக்குநூறாக உடைத்தனர்.
13 வயது நிரம்பிய ஒரு பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்தி அங்கிருந்த ஏரிக்கரைக்கு இழுத்துச் சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர். பெண்களின் மார்பகங்களில் சூடு வைத்தனர். ஆண்களை இரவு முழுதும் அடித்துத் துன்புறுத்தினர். உணவு தானியங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெய் கொட்டப்பட்டது. இதன் முடிவில் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைதுசெய்தனர். அவர்களில் 90 பேர் பெண்கள், 28 குழந்தைகள், 15 பேர் ஆண்கள். இக்கோரச் சம்பவம் நடந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகே வெளி உலகுக்குத் தெரியவந்தது.
இந்த கோரதாண்டவம் குறித்த புகார்களை ஜெயலலிதா தலைமையிலான அன்றைய அதிமுக அரசு ஆரம்பத்தில் மறுத்தது. அதே சமயம் இது தொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி முறையான புகார் பதிவுசெய்யப்பட்டது. இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கை விசாரித்து, 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய் துறையினர் 269 பேர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்று தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
அவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள். அவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து வந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். மேலும் கடந்த மார்ச் 4ஆம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நீதிபதி பி.வேல்முருகன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்பு, வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் குற்றவாளிகளின் மனுக்களை நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். மேலும், தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக 10 லட்சம் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்டவர்கள் இறந்திருந்தால் அவர்களது குடும்பத்திற்கு அந்தத் தொகையை வழங்க வேண்டும் என்றும், அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இழப்பீட்டுத் தொகையில் பாதியான ரூபாய் 5 லட்சத்தை குற்றவாளிகளிடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வாச்சாத்தி கிராம மக்களை பொறுத்தவரை அவர்களது 30 ஆண்டுகால நீதிக்கான போராட்டம், இந்தத் தீர்ப்பின் மூலம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தந்ததில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் நலச்சங்க தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினருமான பி.சண்முகம், CPIM மாநில குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான டெல்லி பாபு உள்ளிட்ட தர்மபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சியினருக்கு பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
– பாரூக்.