உலக புகழ்பெற்ற மதுரைக்கு அடுத்தபடியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகள் எழுந்தருளி அருள் பாலிக்கும் விசேஷமான தலமாக விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகிறது. அவ்வாறு விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களும், வைபவங்களும் இக்கோவிலிலும் நடைபெறும் என்ற சிறப்பினைக் கொண்டுள்ளது.
அதன்படி, விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழாவானது கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் மற்றும் சுந்தரேஸ்வரர் பலவகையான வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வந்தனர். இந்த பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக 9-ம் நாள் திருவிழாவில் நடைபெறும் மீனாட்சி அம்பாளின் திருக்கல்யாணமும், 10-ம் நாள் திருவிழாவில் நடைபெறும் திருத்தேர் பவனியும் கருதப்படுகிறது.
குறிப்பாக…. நடைபெற்ற 10-ம் நாள் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ திருத்தேர் பவனியானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நன்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் திருத்தேர் சுவாமிகளுடன் நிலையிலிருந்து புறப்பட்டு கீழரத வீதி, காய்கறி மார்க்கெட், மதுரை ரோடு வழியாக மீண்டும் கோவிலின் தேர் நிலையை வந்தடைந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த விஷேசமான சித்திரை தேர் திருவிழாவில், திருத்தேரை ஏராளமான பொதுமக்கள் உற்சாகம் பொங்க வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர்.
மேலும், இத்திருத்தேர் பவனியின் போது வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் பூ, பழம், தேங்காய், மாலை உள்ளிட்டவற்றை கொண்டு சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்வு என்பதால் இப்பகுதியில் இன்று ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.