டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஊர்தி சென்னையில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது. மேலும், சென்னையில் பங்கேற்ற மூன்று அலங்கார ஊர்திகள் மதுரை உள்ளிட்ட மூன்று நகரங்களுக்கு மக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதலாவது அலங்கார ஊர்தி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஊர்தி சிவகங்கை மாவட்ட எல்கையான புழுதிபட்டியை இன்று மதியம் வந்தடைந்தது. அந்த அலங்கார ஊர்தியை சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல் செல்வி தலைமையிலான அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
அந்த ஊர்தியில் பல்வேறு வரலாற்றுக் காட்சிகள் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளன.
ஊர்தியின் முகப்பில், வேலூர் கோட்டையில் 1806ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த சுதந்திர போர் வீரர்கள், மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார் ஆகியோரது உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
மேலும், வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கை அழித்து தன்னுயிரைத் தியாகம் செய்த வீராங்கனை குயிலி, ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்துப்போரிட்டு, முதன் முதலில் தூக்குக் கயிறை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கட்டபொம்மன் படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், அன்னியப் படைகளை தனியாகச் சென்று அழித்த ஒண்டிவீரன், மாவீரன் பூலித்தேவன், மாவீரன் அழகு முத்துக்கோன் ஆகியோரின் உருவங்களும் இடம்பெற்றுள்ளன.
மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார் கோயிலின் கோபுரம் கண்களைக் கவரும் வகையிலும் நேரில் தோன்றுவது போன்ற உணர்வு ஏற்படும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிருடன் காட்சி தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தி மதுரை வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் ஜனவரி 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது.
– ராயல் ஹமீது, பாரூக்.